காலி மதுபாட்டில் திரும்பப்பெறும் திட்டத்தை பணியாளர்களிடம் திணிப்பதை கைவிட வேண்டும் : கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு டாஸ்மாக் ஊழியர்கள் தர்ணா...
‘காலி மதுபாட்டில் திரும்பப்பெறும் திட்டத்தை பணியாளர்களிடம் திணிப்பதை கைவிட வேண்டும்’ என வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு டாஸ்மாக் ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி ஒவ்வொரு பாட்டிலுக்கும் ரூ.10 ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு, பின்னர் அந்த பாட்டில்களை மீண்டும் திரும்பப்பெறும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு கூடுதல் பணிகள் டாஸ்மாக் கடை பணியாளர்களிடம் திணிக்கப்படுகின்றன என்று ஊழியர்கள் குற்றம்சாட்டினர். இந்த திட்டத்தை செயல்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டாலும், அதை கடை ஊழியர்களை வைத்து மட்டுமே செயல்படுத்த வேண்டும் என்று எங்கும் கூறவில்லை. இருந்தாலும் டாஸ்மாக் நிர்வாகம் பணியாளர்களை மிரட்டி இந்த பணிகளை செய்ய வற்புறுத்துகிறது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும், காலி பாட்டில்களை கையாளும் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படவில்லை. இதனால் வேலைப்பளு அதிகரிப்பதுடன், ஊழியர்களின் உடல்நலத்துக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் அவர்கள் கூறினர்.
இதனை கருத்தில் கொண்டு காலி மதுபாட்டில் திரும்பப்பெறும் திட்டத்திற்கு மாற்று நடைமுறையை அரசு உருவாக்க வேண்டும் எனவும் டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர்.
போராட்டத்தின் போது டாஸ்மாக் ஊழியர்கள் ரூ.10 ஸ்டிக்கர்களை கழுத்தில் மாலையாக அணிந்து எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் டாஸ்மாக் ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

0 கருத்துகள்: