வெள்ளி, 27 மார்ச், 2026

சிரித்துக் கொண்டே அழுகிறோம்” - தி.மு.க தொகுதிப் பங்கீட்டால் ம.தி.மு.க வருத்தம் !!!

SHARE

 சிரித்துக் கொண்டே அழுகிறோம்” - தி.மு.க தொகுதிப் பங்கீட்டால் ம.தி.மு.க வருத்தம் !!!

ம.தி.மு.க கேட்ட எண்ணிக்கையை விடக் குறைவான தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாலும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வற்புறுத்தப்பட்டதாலும் "நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகிறோம்" என அக்கட்சியின் அவைத் தலைவர் அர்ஜுன ராஜ் வெளிப்படையாகவே தனது ஏமாற்றத்தைத் தெரிவித்து உள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ள நிலையில், தி.மு.க கூட்டணியில் தொகுதிப் பங்கீடு மற்றும் சின்னம் தொடர்பான கறார் போக்கால் அதிருப்திகள் வெடிக்கத் தொடங்கி உள்ளன. குறிப்பாக, ம.தி.மு.க கேட்ட எண்ணிக்கையை விடக் குறைவான தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாலும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வற்புறுத்தப்பட்டதாலும் "நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகிறோம்" என அக்கட்சியின் அவைத் தலைவர் அர்ஜுன ராஜ் வெளிப்படையாகவே தனது ஏமாற்றத்தைத் தெரிவித்து உள்ளார்.

தமிழக அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வரும் தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய இரண்டு திராவிடக் கட்சிகளும் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்து அறிவித்து வருவதால், தமிழக சட்டமன்றத் தேர்தல் கோடை வெப்பத்துக்கு இணையாக அனல் பறக்கிறது.

அ.தி.மு.க கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீடு செய்யும் போது பெரிய சலசலப்புகள் இல்லை. ஆனால், தி.மு.க தொகுதிப் பங்கீடு செய்யும் போது கூட்டணி கட்சிகள் எதிர்பார்த்ததை விட குறைத்து கொடுத்ததால் ஏற்பட்ட சலசலப்பும் ஏமாற்றமும் வெளிப்படையாகவே தெரிந்தது.

தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ், வி.சி.க, சி.பி.ஐ, சி.பி.எம், ம.தி.மு.க, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ம.ம.க, ம.ஜ.க, முக்குலத்தோர் புலிப்படை, கொ.ம.தே.க, ஆதி தமிழர் பேரவை உள்ளிட்ட கட்சிகல் இடம்பெற்று உள்ளன. 

தி.மு.க தொகுதிப் பங்கீட்டில் எண்ணிக்கையில் மிகவும் கறார் காட்டியது. அதுமட்டுமில்லாமல், காங்கிரஸ், வி.சி.க, சி.பி.ஐ, சி.பி.எம், ஐ.யூ.எம்.எல் ஆகிய கட்சிகளைத் தவிர, மற்ற கூட்டணி கட்சிகள் தி.மு.க-வின் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்று கறாராகக் கூறிவிட்டது.

இதனால், தி.மு.க கூட்டணியில் உள்ள ம.தி.மு.க வருத்தம் அளிப்பதாக தெரிவித்து உள்ளது. ம.தி.மு.க அவைத் தலைவர் அர்ஜுன ராஜ், தி.மு.க அளித்த தொகுதிகளின் எண்ணிக்கையாலும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதாலும் தாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம் என்று கூறி உள்ளார். 

சென்னையில் செய்தியாள்ர்களிடம் பேசிய ம.தி.மு.க அவைத் தலைவர் அர்ஜுன ராஜ்,

 “எங்களுடைய தகுதி நிர்ணயத்தில், எங்களுடைய தரத்துக்கு தகுந்த மாதிரி கொடுக்கவில்லை என்கிற வருத்தமும் எங்களுக்கு இருக்கிறது. சிலர் சிரிப்பார், சிலர் அழுவார், நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம். அப்படி என்கிறது தான் எங்களுடைய நிலைமை. இரண்டாவது 4 தொகுதிகளிலும் எங்கள் சின்னத்தில் போட்டி போட முடியவில்லை என்கிற வருத்தத்தோடு நாங்கள் இருக்கிறோம்.” என்று கூறினார்.

வருத்தம் என்பது எண்ணிக்கையினால் வந்த வருத்தமா, இல்லை சின்னத்தினால் வந்த வருத்தமா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், எண்ணிக்கையிலும் வருத்தம் சின்னத்திலும் வருத்தம் என்று கூறினார்.

தொகுதியில் வருத்தமில்லையா ? என்ற கேள்விக்கு பதில் அளித்த அர்ஜுன ராஜ்,

 “தொகுதியில் வருத்தமில்லை, நாங்கள் கேட்ட தொகுதிகளை தான் கொடுத்து இருக்கிறார்கள்” என்று கூறினார்.

சி.பி.ஐ, சி.பி.எம் கட்சிகளுக்கும் ம.தி.மு.க-வுக்கும் கடந்த தேர்தலை 2021 சட்டமன்றத் தேர்தலை விட இந்த தேர்தலில் எண்ணிக்கை குறைத்து இருக்கிறார்கள் வி.சி.க-வுக்கு 2 அதிகமாக கொடுத்து இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கையில் உங்களுக்கு வருத்தம் இருக்கிறதா ? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர்,  

“வருத்தம் இருக்கிறது. தி.மு.க பேச்சுவார்த்தை குழுவிடம் சொல்லி இருக்கிறோம். அது என்ன என்பதை உங்களிடம் சொல்ல முடியாது” என்று கூறினார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: