புடிச்ச இடத்துல யூரின் போற ஆம்பளைகளுக்கு எங்க புரிய போகுது? - எஸ்.வி.சேகர் பேச்சுக்கு சின்மயி பதிலடி !!!
மாணவி கொலை விவகாரத்தில் கருத்து கூறிய S.V. சேகருக்கு பாடகி சின்மயி பதிலடி கொடுக்கும் விதமாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்தத் துயரமான சூழலில், நடிகர் எஸ்.வி.சேகர் இதுகுறித்து தெரிவித்த கருத்துகள் தற்பொழுது கடும் சர்ச்சையை உருவாக்கி உள்ளன. பாதிக்கப்பட்ட சிறுமி எதற்காக வனப்பகுதிக்குள் இருந்த புதர்களுக்குப் பின்னால் சென்றார் என்றும், காவல்துறை எல்லா இடங்களிலும் வந்து வெளிச்சம் பாய்ச்ச முடியாது என்றும் அவர் கேள்வி எழுப்பி இருந்தார். அவரது இந்தக் கருத்துக்கு சமூக வலைதளங்களிலும் பொதுவெளியிலும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பாடகி சின்மயி எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்து பதிவிட்டு உள்ளார்.
அதில் இந்தியாவில் கழிப்பறை வசதி இல்லாத சூழலில் வசிக்கும் பெண்கள் மற்றும் சிறுமிகள், இயற்கை உபாதைகளைக் கழிப்பதற்காகப் பாதுகாப்பற்ற இடங்களுக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அப்படிச் செல்லும் தருணங்களில் அவர்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாவது என்பது துரதிர்ஷ்டவசமாகத் தொடர்ந்து நிகழ்ந்து வரும் ஒரு கசப்பான உண்மையாகும்.
தங்களுக்கு விருப்பமான இடத்தில், பாதுகாப்பாகத் தங்கள் ஆடையின் ஜிப்பை மட்டும் கழற்றிவிட்டு சிறுநீர் கழிக்கக் கூடிய ஆண்களால், பெண்களின் இந்த அடிப்படைப் பாதுகாப்பு சார்ந்த வலியை ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாது என்று குறிப்பிட்டு உள்ளார்.
இந்நிலையில் இதற்கு எஸ்.வி.சேகர் மன்னிப்பு கேட்டு உள்ளார். நேற்று பொதுவாக பெண்களுக்கு பெற்றோர் அதிக பாதுகாப்பாக இருக்க வேண்டும் என சொன்னது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டதாக அறிகிறேன். சம்மந்தப்பட்ட அனைவரிடமும் என் மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன். யாரையும் குறிப்பாக இறந்து போனவர்களை பற்றி தவறாக பேசுவது தவறு என நினைப்பவன் நான் என்று தெரிவித்து உள்ளார்.

0 கருத்துகள்: