தண்டனை முடிந்து 2 ஆண்டுகளுக்கு பின் வழக்கறிஞராகலாம்; பேரறிவாளன் பதிவு குறித்து பார் கவுன்சில் விளக்கம் !!!
தண்டனை முடிந்து 2 ஆண்டுகளுக்கு பின் வழக்கறிஞராகலாம் என்ற அடிப்படையில் பேரறிவாளன் வழக்கறிஞராக பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டார் என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த பேரறிவாளன், சிறையில் இருந்து வெளியில் வந்த பின்னர் சட்டப்படிப்பை முடித்து, கடந்த ஏப்ரல் 27-ம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் வழக்கறிஞராக பதிவு செய்தார். இந்நிலையில், கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு தண்டனை அனுபவித்தவர் எப்படி வழக்கறிஞராக பதிவு செய்ய முடியும் என்ற விமர்சனம் எழுந்தது.
இதனை அடுத்து, இந்த விமர்சனம் குறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலின் வழக்கறிஞர் பதிவுக்குழு தலைவர் கே.பாலு விளக்கம் அளித்து உள்ளார். இதுகுறித்து அவர் அளித்து உள்ள விளக்கத்தில், '1961 வழக்கறிஞர்கள் சட்டத்தின் பிரிவு 24 சட்டப்படிப்பு முடித்தவர்கள் வழக்கறிஞராக பதிவு செய்வதற்கான தகுதிகள் குறித்து கூறுகிறது. பிரிவு 24 ஏ தகுதியின்மை குறித்து தெளிவுப்படுத்துகிறது. அதன்படி, ஒருவர் குற்றவாளியாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டு, அதற்குரிய தண்டனையை அனுபவித்து முடித்து 2 ஆண்டுகளுக்கு பிறகு வழக்கறிஞராக பதிவு செய்யலாம் என்று பிரிவு 24ஏ கூறுகிறது.
அதன் அடிப்படையில் பேரறிவாளன் முறைப்படி சட்டக் கல்வி பயின்று, பிறகு பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்ய விண்ணப்பித்தார். அவர் 2022-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். அவரது விண்ணப்பம், அலுவலக குறிப்பு ஆகியவை பார் கவுன்சில் பதிவு குழுவால் மிகவும் கவனமாக பரிசீலிக்கப்பட்டது.
அதன்படி, அவர் வழக்கறிஞராக பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டார். இதில் எந்த சட்டவிதிமீறலும் இல்லை. இதேபோன்று, பல ஆயுள் தண்டனை கைதிகள், அரசு அலுவலராக இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டவர்கள், தண்டனை காலம் முடிந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு வழக்கறிஞர்களாக பதிவு செய்யப்பட்டு, தற்போது வழக்கறிஞர்களாக தொழில் செய்து வருகின்றனர்.
அந்த வகையில், பேரறிவாளனும் வழக்கறிஞராக பார் கவுன்சிலில் பதிவு செய்துள்ளார். மேலும், ஒரு குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்டவர், தண்டனை காலம் முடிந்து குறிப்பிட்ட காலத்துக்கு பின், சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் போட்டியிட மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் அனுமதிக்கிறது. அப்படி இருக்கும் போது சட்டவிதிகளை புரிந்துக் கொள்ளாமல், பேரறிவாளனை வழக்கறிஞராக நியமனம் செய்ததை குறித்து தேவையற்ற விமர்சனங்களை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்' என தெரிவித்தார்.
காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும், வழக்கறிஞருமான சுதா, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன் வழக்கறிஞராக பதிவு செய்தது அரசியலமைப்பின் கருப்பு நாள் என விமர்சிதது இருந்தார். மேலும், அவரின் பதிவை ரத்து செய்து, அவருக்கு பதிவு செய்ய அனுமதி வழங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடியரசு தலைவர், பிரதமர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்டவர்களுக்கு அவர் கடிதம் எழுதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: