வியாழன், 2 ஏப்ரல், 2026

தமிழகத்தின் பத்தரை லட்சம் கோடி கடனை அடைக்க ‘மஞ்சள் நோட்டீஸ் தான்’ தான் தீர்வு: சூலூரில் சீமான் பேட்டி !!!

SHARE

 தமிழகத்தின் பத்தரை லட்சம் கோடி கடனை அடைக்க ‘மஞ்சள் நோட்டீஸ் தான்’ தான் தீர்வு: சூலூரில் சீமான் பேட்டி !!!

கோவை, சூலூரில் உள்ள அண்ணா சீரணி கலையரங்கில் நாம் தமிழர் கட்சி சார்பில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் போட்டியிடும் வேட்பாளர்களை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்து வைத்தார். முன்னதாக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய சீமான், தற்சார்பு பொருளாதாரத்தின் அவசியம் குறித்து விரிவாக பேசினார். தன் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்த அவர், பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது தமிழகத்தின் பொருளாதார நிலை மற்றும் தேர்தல் அரசியல் குறித்து தனது பாணியில் கருத்துக்களைப் தெரிவித்தார்.

​வேட்பாளர் தேர்வு குறித்துப் பேசிய சீமான், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் "எனது தம்பி பேரறிவாளன் தாய்ப்பாலைப் போலத் தூய்மையானவன். எனது பிள்ளைகள் எவரும் லஞ்சம் வாங்காதவர்கள், ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லாதவர்கள். என் மீது 260-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கலாம், ஆனால் அவை அனைத்தும் மக்களுக்காகப் போராடியதால் வந்தவை. கொள்ளை அடித்ததற்காகவோ, கொலை செய்ததற்காகவோ அல்ல" என தெரிவித்தார்.

​தமிழக அரசு பத்தரை லட்சம் கோடி கடனில் இருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ​"முந்தைய ஆட்சியாளர்கள் செய்த ஊழலால் இன்று தமிழகம் பெரும் கடன் சுமையில் உள்ளது. நான் ஆட்சிக்கு வந்தால், அரசு திவாலாகிவிட்டது என சட்டசபையில் மஞ்சள் துண்டு போட்டு அமர்ந்துவிடுவேன். இந்தக் கடனுக்கு நான் பொறுப்பல்ல. முந்தைய ஆட்சியாளர்களிடம் சென்று வசூலித்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிடுவேன்." மேலும், முன்னாள் ஆட்சியாளர்கள் பல லட்சம் கோடி சொத்துக்களைக் குவித்து வைத்துள்ளதாகவும், காவல்துறை மூலம் அந்தச் சொத்துக்களைப் பறிமுதல் செய்து கடனை அடைக்க முடியும் என்றும் அவர் யோசனை தெரிவித்தார். ​

​இலவசத் திட்டங்களால் மக்களை ஏமாற்றி நாட்டை கடன்கார நாடாக்கிவிட்டதாகச் சாடிய சீமான், வேளாண்மை சார்ந்த தற்சார்பு பொருளாதாரமே இதற்கு நிரந்தரத் தீர்வாகும் என்றார். "உணவுப் பொருட்களை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்குத் திட்டங்கள் என்னிடம் உள்ளன. வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட பசுமைப் பொருளாதாரத்தின் மூலம் மாநிலத்தின் நிதிநிலைமையைச் சீரமைக்க முடியும்" என கூறினார்.

​தேர்தல் பரிசுப் பொருட்கள்

​தேர்தலில் கொடுக்கப்படும் பரிசுப் பொருட்கள் குறித்த கேள்விக்கு, "யார் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ளுங்கள், ஆனால் நேர்மையான வாக்காளராகச் சிந்தித்து உங்கள் வாக்குகளைச் செலுத்துங்கள். என் மக்கள் எப்போதும் நல்லதையே தேடுவார்கள், சரியானதையே செய்வார்கள்" எனத் தெரிவித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: