தேர்தல் முடிந்ததும் குடும்பத்தினருடன் துபாய் பறந்த உதயநிதி ஸ்டாலின் !!!
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்து உள்ள நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துபாய் புறப்பட்டார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப் பதிவு நேற்று பரபரப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் சுமார் 85.15 சதவீத வாக்குகள் பதிவாகி, புதிய வரலாற்று சாதனையை படைத்து உள்ளது.
மாநிலத்தில் மொத்தம் உள்ள 38 மாவட்டங்களில் அதிகபட்சமாக கரூரில் 92.62 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 75.61 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளது. தலைநகர் சென்னையில் முன்பு எப்போதும் இல்லாத அளவில் 83.73 சதவீத வாக்குகள் பதிவாகின.
கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டாலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் போது, 56 லட்சத்து 401 வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தமும் வாக்குப்பதிவு உயர்வுக்கு காரணமாக கருதப்படுகிறது.
முன்னதாக இந்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் சுமார் 35 நாட்களுக்கும் மேலாக இரவு பகலாக தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கடந்த 35 நாட்களுக்கு மேலாக மாநிலம் முழுவதும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நேற்றைய தினம் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடந்து முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை வரும் மே 4 ஆம் தேதி நடைபெறுகிறது.
அதன்படி வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் 10 நாட்கள் உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும், ஓய்வு எடுக்க தொடங்கி உள்ளனர். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் சென்னை விமான நிலையத்தில் இருந்து, இன்று காலை எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் துபாய் புறப்பட்டு சென்றார்.
மேலும் துபாயில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் தங்கி விட்டு, அதன் பிறகு வேறு சில நாடுகளுக்கும் செல்ல திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நாளுக்கு முன்னதாக உதயநிதி ஸ்டாலின் சென்னை வருவார் என கூறப்படுகிறது. இதனை அடுத்து மேலும் சில அரசியல் கட்சி தலைவர்களும், முக்கிய பொறுப்பில் உள்ளவர்களும் வெளிநாடுகளுக்கு செல்ல திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

0 கருத்துகள்: