வாக்குப்பதிவில் வரலாற்று சாதனை படைத்த கரூர் !!!
தமிழ்நாட்டிலேயே அதிகபட்ச வாக்குகள் பதிவான மாவட்டங்கள் பட்டியலில் கரூர் முதலிடம் பிடித்து அசத்தி உள்ளது. இந்த மாவட்டத்தில் வரலாறு காணாத அளவுக்கு வாக்குகள் பதிவாகின.
17-வது தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நேற்று (ஏப்ரல் 23) அமைதியான முறையில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்து உள்ளது. வாக்குப் பதிவில் கரூர் மாவட்டம் முதலில் பிடித்து உள்ளது. இந்த மாவட்டத்தில் 92.63% வாக்குகள் பதிவாகி உள்ளன. கடந்த காலங்களில் நடந்த தேர்தல்களை ஒப்பிடுகையில் இந்த தேர்தலில் கரூரில் வரலாறு காணாத வாக்குகள் பதிவாகி உள்ளது.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, குளித்தலை, கரூர், கிருஷ்ணராயபுரம் (தனி) ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டு உள்ளது. இதில் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் 91.75% வாக்குகளும், கரூர் சட்டமன்றத் தொகுதியில் 93.40% வாக்குகளும், கிருஷ்ணராயபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதியில் 92.45% வாக்குகளும், குளித்தலை சட்டமன்றத் தொகுதியில் 92.79% வாக்குகளும் பதிவாகி உள்ளது.
எந்தெந்த சட்டமன்றத் தொகுதிகளில் எத்தனை வாக்குப் பதிவு இயந்திரங்கள், எத்தனை VVPT கருவிகள், எத்தனை கட்டுப்பாட்டு கருவிகள் பயன்படுத்தப்பட்டு உள்ளன என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்.
அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் 267 வாக்குச்சாவடிகளில் 640 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், 320 கட்டுப்பாட்டு கருவிகள், 347 VVPT கருவிகள் வாக்குப் பதிவிற்காகப் பயன்படுத்தப்பட்டன.
நோட்டாவுடன் 31 வேட்பாளர்களின் சின்னங்கள் பொருத்தப்பட்டு ஒரு வாக்குச்சாவடிக்கு 2 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.
கரூர் சட்டமன்றத் தொகுதியில் 283 வாக்குச்சாவடிகளில் 1,695 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், 339 கட்டுப்பாட்டு கருவிகள், 367 VVPT கருவிகள் வாக்குப்பதிவிற்காகப் பயன்படுத்தப்பட்டன. சுமார் 79 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில் நோட்டா உடன் சேர்த்து 80 சின்னங்கள் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக கரூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்குச்சாவடிக்கு 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.
கிருஷ்ணராயபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதியில் 275 வாக்குச்சாவடிகளில் 660 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், 330 கட்டுப்பாட்டு கருவிகள், 357 VVPT கருவிகள் வாக்குப் பதிவிற்காகப் பயன்படுத்தப்பட்டன. நோட்டாவுடன் சேர்த்து 29 சின்னங்கள் பொருத்தப்பட்டு வாக்குச்சாவடிக்கு இரண்டு வாக்குப் பதிவு வீதம் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.
குளித்தலை சட்டமன்றத் தொகுதியில் 283 வாக்குச்சாவடிகளில் 686 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், 343 கட்டுப்பாட்டு கருவிகள், 371 VVPT கருவிகள் வாக்குப் பதிவிற்காகப் பயன்படுத்தப்பட்டன. நோட்டாவுடன் சேர்த்து 30 சின்னங்கள் பொருத்தப்பட்டு வாக்குச் சாவடிக்கு இரண்டு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வீதம் பயன்படுத்தப்பட்டன.
கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் மொத்தமாக 3,681 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், 1,332 கட்டுப்பாட்டு கருவிகள், 1,442 VVPT கருவிகள் வாக்குப் பதிவிற்காகப் பயன்படுத்தப்பட்டது. வரும் மே 4- ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளது.

0 கருத்துகள்: