கோவை தெற்கு தேர்தல் களத்தில் 'பணமழை': கரூரில் இருந்து இறங்கிய டீம்... அ.தி.மு.க வினர் ஆக்ரோஷத் தாக்குதல் !!!
"ஒரு ஓட்டுக்கு ₹5,000?" - ராமநாதபுரத்தில் கரோர் குழுவினர் பிடிபட்டதால் நள்ளிரவில் உச்சக்கட்ட பரபரப்பு !!!
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் , வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றவர்களை அ.தி.மு.க வினர் தடுத்து நிறுத்தினர். ஒரு சில இடங்களில் பணம் கொடுக்க முயன்றவர்கள் மீது அ.தி.மு.க வினர் தாக்குதல் நடத்தினர்.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கோவையின் பல்வேறு பகுதிகளில் நேற்று பிற்பகல் முதலே தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய இரு கட்சியினரும் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக தொண்டாமுத்தூர் , சிங்காநல்லூர், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பணப்பட்டுவாடா துவங்கி உள்ளது.
இந்நிலையில் கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்காளர்களுக்கு இரவு நேரங்களில் அரசியல் கட்சியினர் பணம் வழங்கி வருகின்றனர். குறிப்பாக இராமநாதபுரம் 80 அடி வீதியில் கரூரை சேர்ந்த குழுவினர் தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக பல்வேறு இடங்களில் பணப்பட்டுவாடாவை துவக்கி உள்ளனர். கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் மட்டும் வாக்காளர்களுக்கு 2,500 முதல் ஐந்தாயிரம் ரூபாய் வரை பணம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ராமநாதபுரம் 80 அடி வீதியில் உள்ள தாமரை பெரிய நாயகி வீதி, அங்கண்ணன் வீதி ஆகிய இடங்களில் பணப்பட்டுவாடா நடந்த நிலையில் கரூரைச் சேர்ந்தவர்களை அ.தி.மு.க வினர் பிடித்து தாக்குதல் நடத்தினர். மேலும் வாகனங்களில் வந்த கரூர் குழுவினரை தடுத்து நிறுத்தி வாகனத்தில் இருந்த பொருட்களை பிடுங்கி அதில் பணம் இருக்கின்றதா என சோதனை செய்ததுடன், காரில் இருந்தவர்கள் மீதும் அ.தி.மு.க வினர் தாக்குதல் நடத்தினர். இதனால் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட ஒரு சில பகுதிகளில் பரபரப்பான சூழல் நிலவியது.
அ.தி.மு.க வினர் இது குறித்து பறக்கும் படை அதிகாரிகளிடம் புகார் அளித்த நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மற்றும் பறக்கும் படையினர் வாகனத்தை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்து வருகின்றனர்.
இதே போல தொண்டாமுத்தூர் பகுதியில் அ.தி.மு.க வினர் 2,000 ரூபாய் வரையும், தி.மு.க வினர் ஆயிரம் ரூபாய் வரையும் பணம் வழங்கி வருகின்றனர்.
சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் ஆயிரம் ரூபாய் வரை வாக்காளர்களுக்கு வழங்கி வருவதாக கூறப்படுகிறது.
வாக்குப் பதிவுக்கு இன்னும் சில தினங்களில் உள்ள நிலையில் பணப்பட்டுவாடா மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 கருத்துகள்: