செவ்வாய், 14 ஏப்ரல், 2026

வெயிலில் வாடிய வேட்பாளர் : விஜய்க்கு வரவேற்பு அளிக்கக் காத்திருந்த சூலூர் த.வெ.க வேட்பாளர் திடீர் மயக்கம் !!!

SHARE

 வெயிலில் வாடிய வேட்பாளர் : விஜய்க்கு வரவேற்பு அளிக்கக் காத்திருந்த சூலூர் த.வெ.க வேட்பாளர் திடீர் மயக்கம் !!!

கோவை கணியூர் சுங்கச்சாவடியில் பரபரப்பு - ஒன்றரை மணி நேர காத்து இருப்பால் சுகுமாருக்கு நேர்ந்த அவதி !!!

 திருப்பூர் மாவட்ட சட்டமன்றத் தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரம் செய்வதற்காக கோவை வந்தடைந்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு வரவேற்பு அளிக்கக் காத்து இருந்த சூலூர் தொகுதி வேட்பாளர் சுகுமார், திடீரென மயங்கி விழுந்த சம்பவம் கணியூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டத்தின் 8 தொகுதிகளில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்துப் பரப்புரை மேற்கொள்ளத் தலைவர் விஜய் இன்று கோவைக்கு வருகை தந்தார். தனி விமானம் மூலம் சென்னைல் இருந்து கோவை வந்த அவருக்கு, அவிநாசி சாலையில் தொண்டர்களும் ரசிகர்களும் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து, கோவை மாவட்டம் கணியூர் சுங்கச்சாவடி அருகே சூலூர் தொகுதி வேட்பாளர் சுகுமார் தனது ஆதரவாளர்களுடன் கட்சித் தலைவரை வரவேற்கத் தயாராக நின்று இருந்தார். சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாகச் சுட்டெரிக்கும் வெயிலில் நின்றிருந்த நிலையில், விஜய் அவர்கள் அந்த இடத்திற்கு வந்தபோது ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் சிக்கிய சுகுமார் திடீரென நிலைதடுமாறி மயங்கி விழுந்தார்.

உடனடியாக அங்கு இருந்த தொண்டர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியில் இருந்தவர்கள் சுகுமாரை மீட்டுச் சாலையோரம் அமர வைத்தனர். அவரது முகத்தில் தண்ணீர் தெளித்து முதலுதவி வழங்கப்பட்டது. சுமார் 15 நிமிடங்களுக்குப் பிறகு அவர் மயக்கம் தெளிந்து இயல்பு நிலைக்குத் திரும்பினார். வேட்பாளர் மயங்கிய சம்பவத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, த.வெ.க தலைவர் விஜய் அவிநாசி மற்றும் பெருமாநல்லூர் பகுதிகளில் நடைபெற உள்ள பிரம்மாண்ட பரப்புரை கூட்டங்களில் பங்கேற்கப் புறப்பட்டுச் சென்றார். தேர்தல் களம் சூடுபிடித்து உள்ள நிலையில், வெயிலின் தாக்கம் மற்றும் கூட்ட நெரிசலால் வேட்பாளரே மயங்கிய சம்பவம் தொண்டர்கள் இடையே விவாதப் பொருளாகி உள்ளது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: