வருமான வரி மோசடி வழக்கு : தொழில் அதிபருக்கு ரூபாய் 24.8 கோடி அபராதம், இரண்டு ஆண்டு சிறை - சி.பி.ஐ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு !!!
வருமான வரி மோசடி வழக்கில் தொழிலதிபருக்கு ரூபாய் 24.8 கோடி அபராதமும், இரண்டு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து கோவை சி.பி.ஐ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்தது.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் பகுதியைச் சேர்ந்தவர் பயாஸ் அஹமத் தொழிலதிபர். எல்.ஐ.சி முகவராகவும் பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 2015 - 16 ம் ஆண்டு வருமான வரி கணக்கை அவர் தாக்கல் செய்தார். மொத்த வருமானம் ரூபாய் 48 கோடி என்று குறிப்பிட்டு இருந்தார். அதற்கான வரி ரூபாய் 22 கோடியே 91 லட்சத்தை அவர் செலுத்தவில்லை, ஈரோடு பகுதியில் சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் இதனை ஆய்வு செய்த போது மொத்தம் ரூபாய் 24 கோடியே 80 லட்சத்தை செலுத்த வேண்டியது இருந்தது தெரிய வந்தது. மேலும் பல்வேறு முறைகேடான ஆவணங்களையும் தாக்கல் செய்து உள்ளது கண்டறியப்பட்டது. ரூபாய் இரண்டு லட்சத்தை மட்டும் செலுத்தி விட்டு மீதி உள்ள தொகையை பயாஸ் அஹமத் செலுத்தவில்லை, வருமான வரித்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் சி.பி.ஐ அதிகாரிகள் பயாஸ் அஹமத் மீது கடந்த 2019 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவரது வங்கிக் கணக்கும் முடக்கி வைக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை கோவை சி.பி.ஐ வழக்குகளை விசாரிக்கும் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
வழக்கை விசாரணை நடத்திய நீதிபதி சிவக்குமார் குற்றம் சாட்டப்பட்ட பயாஸ் அஹமத்துக்கு வருமான வரித்துறையில் மோசடி செய்த தொகையை அபராதமாக விதித்தார். மொத்தம் ரூபாய் 24 கோடியே 80 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும், என்றும் இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பு கூறினார். மேலும் அபராத தொகையை செலுத்தாவிட்டால், மேலும் ஆறு மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் சி.பி.ஐ தரப்பில் வழக்கறிஞர் வெங்கடேஷ் ஆஜராகி வாதாடினார்.

0 கருத்துகள்: