தஞ்சாவூர் பெரிய கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்: பக்தர்கள் சாமி தரிசனம் !!!
உலக பிரசித்திப் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தேரினை வடம்பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.
உலக பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று ‘தஞ்சை பெரிய கோயில்’ என்றழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனுறை ஸ்ரீபெருவுடையார் திருக்கோயில். கட்டட கலைக்கு எடுத்துக் காட்டாய் திகழும் இக்கோயில் உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்குகிறது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இவ்விழா கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 18 நாட்கள் நடைபெறும் இந்த சித்திரை திருவிழாவில் தினமும் மாலை பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடும் நடைபெற்று வருகிறது.
இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக அதிகாலை பெரிய கோயிலில் இருந்து ஸ்ரீவிநாயகர், ஸ்ரீவள்ளி தெய்வானை, ஸ்ரீசுப்ரமணியர், ஸ்ரீசண்டிகேஸ்வரர், ஸ்ரீநீலோத்பலாம்பாள், ஸ்ரீதியாகராஜர், ஸ்கந்தர், ஸ்ரீகமலாம்பாள் ஆகிய சுவாமிகள் முத்துமணி அலங்கார சப்பரத்தில் அமர்ந்து இருக்க, பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெற்று மேலவீதி தேரடியை வந்தடைந்தது.
பின்னர் ஸ்ரீதியாகராஜ சுவாமி, கமலாம்பாள் சுவாமிகள் திருத்தேரில் எழுந்தருள, அவர்களுக்கு சிறப்பு தீபாரதனை காட்டப்பட்டு மங்கல இசைக்கருவிகள் முழங்க தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், அறநிலையத் துறை உதவி ஆணையர் கார்த்திகேயன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே உள்ளிட்ட ஆயிரக் கணக்கான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரினை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். இந்த தேரோட்டம் தஞ்சை நகரின் நான்கு ராஜ வீதிகளிலும் வலம் வந்து, பின்னர் தேரடியில் வந்து நிலையை அடையும்.
தேரோட்டத்தை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. தேரானது 19 அடி உயரமும், 18 அடி அகலமும், 40 டன் எடையும் கொண்டது. அதுவே அலங்காரம் செய்யப்பட்ட பிறகு 50 அடி உயரமும், 43 டன் எடையுடன் காணப்படும். இந்த தேரில் 252 சிற்பங்கள் மற்றும் 165 வெண்கல மணிகள் பொருத்தப்பட்டு உள்ளன.
கோலாட்டம், மயிலாட்டம் தப்பாட்டத்துடன் ஆடி அசைந்து ராஜ வீதிகளில் உலா வந்த தேரினை தஞ்சாவூர் மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தேர் திருவிழாவை முன்னிட்டு நூற்றுக் கணக்கான காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் மற்றும் மருத்துவத் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். கடுமையான வெயில் காலம் என்பதால் ஆங்காங்கே தண்ணீர் பந்தல், அன்னதானம் ஆகியவை பக்தர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. மேலும் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் பாதிரியார்கள், உலேமாக்கள், இஸ்லாமிய பெண்கள் பங்கேற்று பொதுமக்களுக்கு எலுமிச்சை ஜூஸ், தண்ணீர், நீர் மோர் ஆகியவற்றை வழங்கினர்.

0 கருத்துகள்: