வெள்ளி, 24 ஏப்ரல், 2026

சித்திரை திருவிழாவை முன்னிட்டு வைகை அணையில் நீர் திறப்பு !!!

SHARE

 சித்திரை திருவிழாவை முன்னிட்டு வைகை அணையில் நீர் திறப்பு !!!

சித்திரை திருவிழாவை முன்னிட்டு வைகை அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கபட்டு உள்ளது.

உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழாவின் போது, கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்விற்காக ஒவ்வொரு ஆண்டும் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.

ஆனால், இந்த ஆண்டு 71 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 33 அடியாக சரிந்து உள்ளது. போதுமான நீர் இருப்பு இல்லாத காரணத்தால், மதுரை சித்திரை திருவிழாவிற்கு தண்ணீர் திறக்க முடியுமா ? என்ற அச்சம் நிலவி வந்தது.

இதுபோன்ற சூழலில் மே 1 ஆம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு நடைபெற உள்ளதால், இருப்பில் உள்ள தண்ணீரைக் கொண்டு மதுரை சித்திரை திருவிழாவிற்கு தண்ணீர் திறக்க முடியுமா என்று பொதுப்பணித் துறையினர் தீவிர ஆலோசனைகள் மேற்கொண்டு வந்தனர்.

குறிப்பாக, அணையில் இருந்து ஆற்றுப்படுகை வழியாக தண்ணீர் திறக்கப்பட்டால் கடும் வெயில், வறண்டு போன நிலம் இதன் காரணமாக தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்படும் என்பதை உணர்ந்த பொதுப்பணி துறையினர் மாற்று ஏற்பாடுகளை ஆராய்ந்தனர்.

எனவே, வைகை அணையில் இருந்து பாசன கால்வாய் வழியாக மதுரைக்கு தண்ணீர் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. மொத்தமாக 170 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, இன்று முதல் வருகிற 29 ஆம் தேதி வரையில் தண்ணீர் திறக்க முடிவு செய்து, வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

வைகை அணையில் இருந்து பாசன கால்வாய் வழியாக மதுரை கொண்டு செல்லப்படும் தண்ணீர் முதற்கட்டமாக மதுரை செல்லூர் கண்மாயில் தண்ணீரை தேக்கி வைத்து அங்கிருந்து கள்ளழகர் ஆற்றில் இறங்கும் பகுதிக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதுதவிர மதுரை கொண்டமாரி ஓடை வழியாகவும், மதுரை கள்ளழகர் ஆற்றில் இறங்கும் பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்லவும் திட்டமிடப்பட்டு உள்ளனர். மதுரை சித்திரை திருவிழாவை போலவே சோழவந்தான் பகுதியிலும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு பிரம்மாண்டமாக நடைபெறும்.

அந்த நிகழ்விற்கும் தண்ணீர் வழங்கும் வகையில் ராமராஜபுரம் பகுதியில் இருந்து சோழவந்தான் பகுதிக்கு தண்ணீர் வழங்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. ஏற்கனவே, நீர்மட்டம் சரிந்துள்ள நிலையில் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால் அணையின் நீர்மட்டம் 4 முதல் 5 அடிவரை சரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: