ஆட்சியை தக்க வைத்தார் முதலமைச்சர் விஜய் - எண்ணிக் கணிக்கும் முறையில் 144 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு !!!
சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை பெற்று முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க அரசு ஆட்சியை தக்க வைத்தது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சியின் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.
நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் அவையில் முன்மொழிந்தார். அதனைத் தொடர்ந்து தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்று, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் தி.மு.க பங்கேற்காமல் வெளிநடப்பு செய்தது.
சட்டப்பேரவை 6 பகுதிகளாக பிரிக்கப்பட்டு, ஆதரவு, எதிர்ப்பு, நடுநிலை என சபாநாயகர் வாக்கெடுப்பை நடத்தினார்.
பெரும்பான்மையை பெற 117 எம்.எல்.ஏ- களின் ஆதரவு தேவை என்ற நிலையில், த.வெ.க அரசிற்கு 144 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவை அளித்தனர். இதன் மூலம் த.வெ.க பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை தக்க வைத்தது.
மேலும், அ.தி.மு.க சார்பில் 22 எம்.எல்.ஏ-க்கள் எதிர்ப்பும், பா.ம.க, பா.ஜ.க சார்பில் 5 பேர் நடுநிலையும் வகித்தனர். மொத்தம் 171 பேர் வாக்கெடுப்பில் பங்கேற்றனர். திருப்பத்தூர் த.வெ.க எம்.எல்.ஏ சென்னை உயர்நீதிமன்றத்தின் தடை விதிப்பு காரணமாக வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க அரசு பெரும்பான்மையை பெற்று, வெற்றி பெற்றதாக சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் அறிவித்து, வாழ்த்து தெரிவித்தார்.

0 கருத்துகள்: