புதன், 13 மே, 2026

'பீர்' பாட்டிலுடன் இளம்பெண் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் ரகளை - "முதல்வர் விஜய் உடனே வரணும்" என மிரட்டல் !!!

SHARE

  'பீர்' பாட்டிலுடன் இளம்பெண் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் ரகளை - "முதல்வர் விஜய் உடனே வரணும்" என மிரட்டல் !!!

மனநிலை பாதிப்பா ? அல்லது போதை ஊசி காரணமா ? - சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்த காவல்துறை 

​ கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று இளம்பெண் ஒருவர் கையில் பீர் பாட்டிலுடன் புகுந்து, "முதல்வர் விஜய் உடனடியாக இங்கு வர வேண்டும்" எனப் போதையில் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 அந்தப் பெண்ணைப் பிடித்த போலீசார், சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர்.

​விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் (மலர் - பெயர் மாற்றப்பட்டு உள்ளது), நேற்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து உள்ளார். கையில் பீர் பாட்டிலுடன் அலுவலக வளாகத்தின் உள்ளே அமர்ந்த அவர், திடீரெனப் போதையில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அவரை அப்புறப்படுத்த முயன்ற போது, "தமிழக முதல்வர் விஜய் உடனடியாக இங்கே வர வேண்டும்; அவரைப் பார்த்தே தீருவேன்" என உரத்த குரலில் கத்தி ரகளையில் ஈடுபட்டார்.

​இதனைத் தொடர்ந்து, பெண்களின் பாதுகாப்பிற்காகப் பயன்பாட்டில் உள்ள ‘பிங்க்’ (Pink) நிற ரோந்து வாகனத்தை வர வழைத்த போலீசார், அந்தப் பெண்ணை மீட்டு ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். 

அங்கு நடத்திய முதற்கட்ட விசாரணையில், அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியது தெரியவந்தது. அவர் மதுப் போதையில் இருந்தாரா ? அல்லது போதை ஊசி போன்ற அபாயகரமான மருந்துகளைப் பயன்படுத்தினாரா ? என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்து உள்ளது.

​மேலும், அந்தப் பெண்ணுக்கு மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கலாம் எனச் சந்தேகித்த காவல் துறையினர், அவரை சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இளம்பெண் ஒருவர் பீர் பாட்டிலுடன் புகுந்து முதல்வரைப் பார்க்க வேண்டும் என அடம்பிடித்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: