வெள்ளி, 1 மே, 2026

திருவண்ணாமலையில் ஆக்கிரமிப்பு விவகாரம்: தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி ?

SHARE

 திருவண்ணாமலையில் ஆக்கிரமிப்பு விவகாரம்: தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி ?

திருவண்ணாமலை மலையில் உள்ள நிலம் மற்றும் நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்காதது ஏன் ? என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

திருவண்ணாமலையில் உள்ள தாமரைக்கேணி உள்ளிட்ட நீர்நிலைகளையும், மலையில் உள்ள ஓடைகளையும் ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ள கட்டுமானங்களை அகற்றக் கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குகளை தாக்கல் செய்து இருந்தார்.

இந்த வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி, நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, மனுதாரர் யானை ராஜேந்திரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், திருவண்ணாமலையில் மலையை சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை என தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசு தரப்பில், மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்காத தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி, நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வு, திருவண்ணாமலையை சுற்றி சுமார் 2500 பேர் ஆக்கிரமிப்பு செய்ததாக புகார் எழுந்து உள்ளது. நீதிமன்றம் கண்காணிப்பு குழுவை அமைத்தும் உத்தரவிட்டு உள்ளது. ஏற்கனவே, ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடப்பட்டது. இதுவரை எத்தனை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன? ஏன் மாவட்ட நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்யவில்லை என அரசுக்கு கேள்வி எழுப்பினர்.

மேலும், கடந்த 2024 ஆம் ஆண்டு முதல் சுமார் 136 குளம் மற்றும் வாய்க்கால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது தொடர்பாக 4 வாரங்களில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: