வெற்றி சான்றிதழை கொண்டு வந்து எம்.எல்.ஏ வாக பதவியேற்ற கீர்த்தனா !!!
இன்றைய சட்டமன்றக் கூட்டத்தொடரில் புதிய எம்.எல்.ஏ க்கள் பதவியேற்ற நிலையில், வெற்றி சான்றிதழ் கொண்டு வராததால் தவெகவை சேர்ந்த அமைச்சர் கீர்த்தனா பதவியேற்கவில்லை. தொடர்ந்து, வெற்றி சான்றிதழை வீட்டில் இருந்து கொண்டு வந்து எம்.எல்.ஏ வாக பதவியேற்றார்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவான விஜய்யின் த.வெ.க, பின்னர் பிற கட்சிகளின் ஆதரவை பெற்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைத்து உள்ளது.
தொடர்ந்து, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று (மே.10) நடைபெற்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியில் த.வெ.க, தலைவர் விஜய், முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டனர்.
பின்னர், அக்கட்சியை சேர்ந்த என். ஆனந்த், சி.டி.ஆர். நிர்மல்குமார், வெங்கட்ரமணன், கீர்த்தனா உள்ளிட்ட எம்.எல்.ஏ க்கள் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
இந்நிலையில், த.வெ.க, தலைமையில் 17 வது தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. இதில், முதலமைச்சர் விஜய் பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ வாக பதவியேற்றார்.
தொடர்ந்து, அனைத்து கட்சிகளையும் சேர்ந்த புதிய எம்.எல்.ஏ க்கள் உறுதிமொழி ஏற்று பதவியேற்றனர்.
பின்னர், அமைச்சர்கள் வரிசையில் த.வெ.க வை சேர்ந்த கீர்த்தனா கடைசியாக அழைக்கப்பட்டார். சட்டமன்ற செயலாளர் சீனிவாசன் அவரது பெயரை கூறி அழைத்தார்.
பெயரை அழைத்ததும், கீர்த்தனாவும் எம்.எல்.ஏ வாக பதவியேற்பதற்காக சென்றார். அப்போது, சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற சான்றிதழை சட்டமன்ற செயலாளர் சீனிவாசன் கேட்டார்.
அதற்கு கீர்த்தனா, தான் சான்றிதழ் கொண்டு வரவில்லை என்றார். இதை அடுத்து, அவர் பதவியேற்க சட்டமன்றச் செயலாளர் அனுமதி மறுத்தார். இதனால் அவர் மீண்டும் தனது இருக்கைக்கு சென்றார். வெற்றி சான்றிதழை அவர் நாளை (மே 12) கொண்டு வந்து எம்.எல்.ஏ வாக பதவியேற்பார் என கூறப்பட்டது.
ஆனால், வீட்டில் இருந்து வெற்றி சான்றிதழை கொண்டு வந்த அமைச்சர் கீர்த்தனா, மதியம் 1.30 மணி அளவில் எம்.எல்.ஏ வாக பதவி ஏற்றுக் கொண்டார்.
எம்.எல்.ஏ வாக பதவியேற்பதற்கு சம்பந்தப்பட்ட தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முந்தைய நாளே இதுதொடர்பான அறிவுறுத்தல் புதிய எம்.எல்.ஏ க்களுக்கு தரப்பட்டு இருக்கும். இருந்த போதிலும், த.வெ.க, அமைச்சர் கீர்த்தனா, வெற்றி சான்றிதழை கொண்டு வராதது பேசுபொருளாகி உள்ளது.
சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் த.வெ.க, சார்பில் நின்று வெற்றி பெற்றவர் கீர்த்தனா. 1996-இல் பிறந்த இவரது வயது 30. த.வெ.க, அமைச்சரவையில் இடம்பெற்ற இளம் வயது அமைச்சர் என்ற பெருமையை கீர்த்தனா பெற்று உள்ளார்.
அரசியலுக்கு வருவதற்கு முன்பே அரசியல் ஆலோசகராக பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுப்பதில் பின்னணியில் அவர் இருந்து உள்ளார்.
சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து, ஊடகங்கள் அவரை பேட்டி எடுத்தன. அப்போது கீர்த்தனா தமிழில் பேசாமல் இந்தியில் பேசினார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

0 கருத்துகள்: