திங்கள், 11 மே, 2026

சபாநாயகர் தேர்தல்: முதல்வர் முன்னிலையில் ஜே.சி.டி. பிரபாகர் வேட்புமனு தாக்கல் !!!

SHARE

 சபாநாயகர் தேர்தல்: முதல்வர் முன்னிலையில் ஜே.சி.டி. பிரபாகர் வேட்புமனு தாக்கல் !!!

சபாநாயகர் பதவிக்கு ஜே.சி.டி. பிரபாகர் மற்றும் துணை சபாநாயகர் பதவிக்கு எம்.ரவிசங்கர் வேட்புமனு அளித்தனர்.

தமிழ்நாட்டில் 17 வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று (மே 11) நடைபெற்றது. இதில் தற்காலிக சபாநாயகராக ஆளுநரால் நியமிக்கப்பட்ட கருப்பையா, தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ-க்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

முதலமைச்சர் ஜோசப் விஜய், திருச்சி கிழக்கு எம்.எல்.ஏ பதவியை ராஜிநாமா செய்த நிலையில், பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ-வாக பதவியேற்றுக் கொண்டார். சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதிக்கான எம்.எல்.ஏ-வாக பதவியேற்றுக் கொண்டார்.

எடப்பாடி தொகுதிக்கான உறுப்பினராக அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, போடிநாயக்கனூர் தொகுதி உறுப்பினராக ஓ.பன்னீர்செல்வம், விருத்தாச்சலம் தொகுதி உறுப்பினராக பிரேமலதா உள்ளிட்டவர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

இன்றைய கூட்டத்தில் 233 உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.

17 வது சட்டப் பேரவையின் நிரந்தர சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் ஆகியவர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதனை அடுத்து, த.வெ.க சார்பாக ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினரான ஜே.சி.டி.பிரபாகர் சபாநாயகர் பதவிக்கும், திருச்சி துறையூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.ரவிசங்கர் துணை சபாநாயகர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

இதற்கான வேட்பு மனுவினை சட்டப் பேரவை செயலாளர் கே.சீனிவாசனை சந்தித்து முதலமைச்சர் விஜய் முன்னிலையில் இருவரும் அளித்தனர். இந்நிலையில், வேறு யாரும் சபாநாயகர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில், நாளை இருவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: