திங்கள், 11 மே, 2026

அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பதவியேற்பு - சபாநாயகர், துணை சபாநாயகர் போட்டியின்றி தேர்வு !!!

SHARE

 அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பதவியேற்பு - சபாநாயகர், துணை சபாநாயகர் போட்டியின்றி தேர்வு !!!

ஆயிரம் விளக்கு தொகுதியின் த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் ஜெ.சி.டி.பிரபாகர், சபாநாயகராகவும், துறையூர் தொகுதியின் த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் ரவிசங்கர், துணை சபாநாயகராகவும் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

17-ஆவது தமிழ்நாடு சட்டமன்றத்தின் முதல் கூட்டம் தொடங்கிய நிலையில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 108 சட்டமன்றத் தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. எனினும், ஆட்சி அமைக்கப் பெரும்பான்மைக்கு 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்து உள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். அவருடன் அமைச்சரவையும் பதவியேற்றுக் கொண்டது. பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த நிலையில், திருச்சி கிழக்கு எம்.எல்.ஏ பதவியை முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்து இருந்தார்.

அதைத் தொடர்ந்து, சோழவந்தான் த.வெ.க எம்எல்ஏ கருப்பையா, தற்காலிக சபாநாயகராகப் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதன் தொடர்ச்சியாக இன்று (மே 11) காலை 09.30 மணிக்கு 17ஆவது தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டம் கூடியது.

முதலில் முதலமைச்சர் விஜய், பெரம்பூர் எம்.எல்.ஏ வாகப் பதவியேற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து, அமைச்சர்கள் 9 பேரும் எம்.எல்.ஏ க்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். பின்னர் முன்னாள் முதலமைச்சர்களான ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க முன்னாள் அமைச்சர்களான உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு, கோவி.செழியன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும் பதவியேற்றுக் கொண்டனர்.

பா.ம.க சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி, தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அ.தி.மு.க எம்.எல்.ஏ லீமா ரோஸ், தமிமுன் அன்சாரி, வன்னி அரசு உள்ளிட்டோரும் எம்.எல்.ஏ க்களாக பதவியேற்று கொண்டனர். தற்காலிக சபாநாயகரைத் தவிர்த்து மற்ற அனைத்து உறுப்பினர்களும் இன்றே பதவியேற்று கொண்டனர். இதில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மட்டும் சபாநாயகர் அறையில் எம்.எல்.ஏ வாக பதவியேற்றுக் கொண்டார்.

பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் போஜராஜன், பா.ம.க சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி, தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் லீமா ரோஸ், முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம், தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் சிலர் உள்ளிட்டோர் பதவியேற்பின் போது முதலமைச்சர் விஜய்க்கு வணக்கம் தெரிவித்தனர்.

பண்ருட்டி தொகுதியின் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் மோகன், பதவியேற் போது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை நினைவுக் கூர்ந்து கண்ணீர் விட்டார். பிரேமலதா விஜயகாந்த் மற்றும் சேலம் தெற்கு சட்டமன்றத் தொகுதியின் த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் தமிழன் ஆ.பார்த்திபன் உள்ளிட்டோர் சட்டப் பேரவை நுழைவுவாயில் படியில் வணங்கி சட்டப்பேரவைக்கு உள்ளே சென்றனர்.

தமிழ்நாடு சட்டப் பேரவையின் சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாளை (மே 12) நடைபெற உள்ள நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.சி.டி.பிரபாகர், சபாநாயகர் பதவிக்கும், துறையூர் தொகுதியின் த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் ரவிசங்கர், துணை சபாநாயகர் பதவிக்கும் போட்டியிட வேட்பு மனுவைத் தாக்கல் செய்து இருந்த நிலையில் வேறு எந்த கட்சியில் இருந்தும் வேட்பு மனுத் தாக்கல் செய்யப்படாததால் அவர்கள் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து தற்காலிக சபாநாயகர் கருப்பையா நாளை (மே 12) காலை சட்டப் பேரவையில் அதிகாரப் பூர்வமாக அறிவிக்க உள்ளார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: