கார்-லாரி நேருக்கு நேர் மோதி விபத்து; ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி !!!
காரில் பயணித்த 12 வயது சிறுவன் சுஜித் மட்டும் அதிர்ஷ்டவசமாக தப்பி உள்ளார்.
பொள்ளாச்சி அருகே கார், லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தனபால் என்பவர் தனது குடும்பத்தினருடன் வால்பாறை சுற்றுலா சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர்கள் பயணித்த கார், கோயம்பத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியில் உள்ள நெகமம் பகுதியில் வந்துக் கொண்டு இருந்த போது, எதிரே வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளானது.
இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த தனபால், அவரது மனைவி மேனகா மற்றும் உறவினர்கள் அனுஷ்கா, சினேகா ஆகிய 4 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதே நேரத்தில், காரில் பயணித்த 12 வயது சிறுவன் சுஜித் மட்டும் அதிர்ஷ்டவசமாக தப்பி உள்ளார். ஆனால், அவர் பலத்த காயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டு உள்ளார். முதலில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் கோவைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சாய்பாபா கோவில் பகுதியில் உள்ள தனியா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து தொடர்பாக லாரி ஓட்டுநர் சரவணன் என்பவரை கைது செய்த நெகமம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், விபத்து குறித்து போலீசார் கூறுகையில்,
"தனபால் குடும்பத்தார் வால்பாறை சென்று விட்டு, சொந்த ஊருக்கு திரும்பும் போது இந்த விபத்து அரங்கேறி உள்ளது. லாரி ஓட்டுநர் சரவணன் அதிக வேகமாக லாரியை இயக்கி உள்ளார். இதனால் காரில் பயணம் செய்ய தனபால் குடும்பத்தார் நான்கு பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்து உள்ளனர். சிறுவன் சுஜித் படுகாயம் அடைந்த நிலையில், பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அழைத்துச் செல்லப்பட்டு உள்ளார்" என்றனர்.


0 கருத்துகள்: