வெள்ளி, 1 மே, 2026

துளியும் மாற்றமில்லை; நல்ல செய்தி வரும்’ - மே தினத்தில் தொண்டர்களை உற்சாகப்படுத்திய முதல்வர் ஸ்டாலின் !!!

SHARE

 துளியும் மாற்றமில்லை; நல்ல செய்தி வரும்’ - மே தினத்தில் தொண்டர்களை உற்சாகப்படுத்திய முதல்வர் ஸ்டாலின் !!!

தி.மு.க கட்சித் தொண்டர்கள் உழைத்த உழைப்பிற்கு மே 4 அன்று பலன் கிடைக்கும் என்று தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மே தின நிகழ்வில் பேசி உள்ளார்.

மே 1 தொழிலாளர் தினமான இன்று, சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் உள்ள தொழிலாளர்களுக்கான நினைவுச் சின்னத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சரும் தி.மு.க தலைவருமான மு க ஸ்டாலின் தொழிலாளர்களின் அடையாளமான சிவப்பு சட்டை அணிந்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில்,

 “கட்சித் தோழர்கள் உழைத்த உழைப்பிற்கு பலன் வரும் மே 4 ஆம் தேதி கிடைக்கப் போகிறது. இதில் துளி அளவும் மாற்றம் இல்லை. ஏதோ கருத்துக்கணிப்பின்படி இதை நான் கூறுகிறேன் என யாரும் கருத வேண்டாம். நமது தொண்டர்களின் உணர்வை உணர்ந்த காரணத்தினால் இதை நான் கூறுகிறேன்.

மே முதல் நாளான இன்று தொழிலாளர்களின் உணர்வை உரிமையை கொண்டாடக்கூடிய வகையில் மே 1 தினத்தை நாம் கொண்டாடி வருகிறோம். மே 1 தினத்தை அரசு ஊதியத்துடன் கூடிய விடுமுறையாகவும், அந்த அரசு விடுமுறையை சட்டமாக்கித்தந்த வரும் கருணாநிதியே ஆவார்.

தமிழ்நாட்டில் மட்டும் மே 1 அரசு விடுமுறையாக கொண்டாடப்பட்டு வந்த நிலையில், இந்தியா முழுவதிலும் மே ஒன்றாம் தேதி அரசு விடுமுறையாக கொண்டாட வேண்டும் என முன்னாள் முதல்வர் கருணாநிதி சார்பில் நாடாளுமன்றத்தில் எடுத்துரைக்கப்பட்டு, அது அப்போதைய பிரதமர் வி.பி. சிங்கால் அங்கீகரிக்கப்பட்டது. தற்போது இந்தியா முழுவதும் மே 1 தினம் தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய அரசு விடுமுறையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இன்னும் இரண்டு மூன்று நாட்களில் தேர்தல் முடிவை எதிர்பார்த்து காத்து இருக்கும். உங்களுக்கு ஒரு நல்ல செய்தி வரும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் உள்ளது. 'எல்லோருக்கும் எல்லாம்' என்ற தத்துவத்தின் படியே நாம் ஆட்சி நடத்திக் கொண்டு இருக்கிறோம். அது தொடரும்.

தொழிலாளர்களின் நலன் மீதும்; உரிமை மீதும், எந்த அளவிற்கு கருணாநிதி நம்பிக்கை வைத்திருந்தாரோ, அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து பாடுபடுவோம்" என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் அமைச்சர்கள் கே.என் நேரு, எ.வ வேலு, மா. சுப்பிரமணியன், சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ.ராசா உள்ளிட்ட தி.மு.க வின் மூத்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: