வெள்ளி, 1 மே, 2026

வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர் - ‘கோவிந்தா’ முழக்கத்துடன் பக்தர்கள் சாமி தரிசனம் !!!

SHARE

 வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர் - ‘கோவிந்தா’ முழக்கத்துடன் பக்தர்கள் சாமி தரிசனம் !!!

சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று மிகக் கோலாகலமாக நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் கூடிவந்து சாமி தரிசனம் செய்தனர்.

உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாகக் கருதப்படும் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்விற்காக, ஏப்ரல் 29-ஆம் நாள் மாலை திருமாலிருஞ்சோலையிலிருந்து சுந்தரராஜப் பெருமாள் கள்ளழகர் வேடமிட்டு மண்டூக முனிவருக்கு மோட்சம் கொடுப்பதற்காக மதுரை நோக்கி தங்கப் பல்லக்கில் புறப்பட்டார்.

அங்கு இருந்து பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, சுந்தரராஜன்பட்டி, கடச்சனேந்தல், சர்வேயர்காலனி வழியாக நேற்று (ஏப்.30) அதிகாலை மூன்று மாவடி வந்து சேர்ந்த அழகரை, பக்தர்கள் எதிர்கொண்டு வரவேற்றனர்.

வழியில் அழகர் கோயில் தொடங்கி வண்டியூர் வரை 568 மண்டகப்படியில் எழுந்தருளும் கள்ளழகர், நேற்று இரவு 8.30 மணிக்கு தல்லாகுளம் அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயிலுக்கு வருகை தந்து, தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி, திருவில்லிபுத்தூர் சூடிக்கொடுத்த நாச்சியார் அருள்மிகு ஆண்டாளுடைய திருமாலையை அணிந்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, இன்று அதிகாலை 3.00 மணி அளவில் தல்லாகுளம் அருள்மிகு கருப்பணசாமி கோயில் எதிரே அமைக்கப்பட்டு உள்ள ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார். அங்கிருந்து காலை 3.30 மணியளவில் புறப்பட்ட அழகர் 5.45 மணிக்கு ஆழ்வார்புரம் ஏவி மேம்பாலம் அருகே உள்ள வைகையாற்றில் எழுந்தருளினார். அங்கு வீரராகவப் பெருமாள் அழகரை எதிர்கொண்டு வரவேற்றார்.

வைகையாற்றில் கூடியிருந்த பக்தர்களுக்காக மூன்று முறை வலம்வந்த அழகரை, ‘கோவிந்தா... கோவிந்தா...’ என விண் அதிரும் முழக்கத்துடன் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

பிறகு இந்து சமய அறநிலையத்துறை சார்பாக அமைக்கப்பட்ட மண்டகப்படியில் எழுந்தருளிய அழகரை மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார், காவல்துறை ஆணையர் அபிஷேக் தீக்ஷித், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், உயர்நீதிமன்ற, மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் வழிபட்டனர்.

காலை 7.15 மணி அளவில் வைகையாற்றில் இருந்து புறப்பட்ட அழகர், ஆழ்வார்புரம் வழியாக 12 மணியளவில் ராமராயர் மண்டபத்திற்கு செல்கிறார். அங்கு அழகருக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பிற்பகல் 3 மணி அளவில் ராமராயர் மண்டபத்திலிருந்து புறப்படும் அழகர், பல்வேறு மண்டகப்படியில் எழுந்தருளி அண்ணாநகர் வழியாக வண்டியூரில் உள்ள வீரராகவப் பெருமாள் கோயிலில் இரவு தங்குகிறார். அங்கு அழகருக்கு பக்தர்கள் சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

நாளை காலை வண்டியூர் வைகையாற்றில் அமைந்துள்ள தேனூர் மண்டபத்தில் மண்டூக முனிவருக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்வு நடைபெறுகிறது. நாளை இரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்வு விடிய விடிய நடைபெறுகிறது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: