வெள்ளி, 1 மே, 2026

தி.மு.க தலைமையிலான கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும்: வைகோ உறுதி !!!

SHARE

 தி.மு.க தலைமையிலான கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும்: வைகோ உறுதி !!!

தி.மு.க தலைமையிலான கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

மே தின விடுமுறைக்காக குரல் கொடுத்தேன்

மே தினத்தை முன்னிட்ட ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ எழும்பூரில் உள்ள ம.தி.மு.க தலைமை அலுவலகமான தாயகத்தில் மே தின கொடியேற்றி இனிப்பு வழங்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 

"செய்தியாளர்கள், பத்திரிக்கையாளர் என அனைத்து தொழிலாளர் தோழர்களுக்கும் ம.தி.மு.க சார்பில் என்னுடைய மே தின வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் 1967-இல் அண்ணா கோவை சிதம்பர பூங்காவில் மே தினத்தை கொண்டாடி அரசு விடுமுறை என அறிவித்தார். ஒன்றிய அரசு மே தினத்தை விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று நான் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினேன். அதைத் தொடர்ந்து அப்போது அமைச்சராக இருந்த ராம் விலாஸ் பஸ்வான் இரு அவைகளிலும் விடுமுறை விடப்படும் என அன்றைய தினமே அறிவித்தார்.

மோடி அரசு தொழிலாளர்களை நசுக்கி முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது. தொழிலாளர்கள் நாடு முழுவதும் உரிமைக்காக போராடுகிறார்கள். நாங்களும் அவர்களுக்காக இணைந்து போராடுவோம். தொழிலாளர்களுக்கு விரோதமான எந்த நடவடிக்கைக்களையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அதை எதிர்த்து போராடும் முதல் இயக்கமாக ம.தி.மு.க இருக்கும்.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு குறித்து பல்வேறு விதமான தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிகமான கருத்துக்கணிப்புக்கள் தி.மு.க கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்து உள்ளன. வாக்கு எண்ணும் போது அதன் உண்மை தன்மை தெரியவரும். என்னைப் பொறுத்த வரையில் மீண்டும் தி.மு.க ஆட்சி அமைக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.

மாற்றத்திற்காக நிறைய பேர் வாக்களித்து உள்ளார்கள் என்று பத்திரிகையாளர்கள் கேள்விகளை முன்வைக்கிறீர்கள். அதற்கு என்னுடைய பதில் வாக்கு மே 4-ஆம் தேதி எண்ணும் போதுதான் தெரிய வரும் என்பதே. தி.மு.க வெற்றி பெறும், இரண்டாவது முறையாக தி.மு.க ஆட்சி அமைக்கும் என்பதே என்னுடைய கணிப்பாக உள்ளது. தி.மு.க கூட்டணியும் அதிக இடங்களில் வெல்லும் என்று உறுதியாக நம்புகிறேன்" என்றார்.

முன்னதாக, வாக்குப்பதிவுக்கு பிறகு பல்வேறு நிறுவனங்கள் தமிழக தேர்தல் நிலவரம் தொடர்பாக கணிப்புக்களை வெளியிட்டு உள்ளன. அதில் அதிகப்படியான நிறுவனங்கள் தி.மு.க கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும், சில நிறுவனங்கள் அ.தி.மு.க வெல்லும் எனவும், ஒரு நிறுவனம் த.வெ.க ஆட்சி அமைக்கும் எனவும் தங்களின் கருத்து கணிப்புக்களை வெளியிட்டு இருந்தன.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: