ஞாயிறு, 10 மே, 2026

திருப்பத்தூர் தொகுதி தேர்தல் வழக்கு: தேர்தல் ஆணையம் பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு !!!

SHARE

 திருப்பத்தூர் தொகுதி தேர்தல் வழக்கு: தேர்தல் ஆணையம் பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு !!!

தபால் வாக்குகள் மாறி உள்ளதாக தகவல்கள் கிடைத்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை ? என தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சீனிவாச சேதுபதி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான பெரிய கருப்பனை ஒரு வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தினார். இதைத் தொடர்ந்து திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சீனிவாச சேதுபதி, எம்.எல்.ஏ வாகப் பதவியேற்கத் தடை விதிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் பெரிய கருப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அந்த மனுவில், "திருப்பத்தூர் தொகுதிக்கான தபால் வாக்குகள் சிவகங்கை மாவட்டத்தில் பதிவாகி இருப்பதால் அவற்றை மீட்டு பாதுகாக்க வேண்டும். மீட்கப்படும் தபால் வாக்குகளை திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியின் கணக்கில் சேர்க்க உத்தரவிட வேண்டும்; வாக்குகள் மறுசரிபார்க்கப்பட்ட நிலையில் அது தொடர்பான காணொளி காட்சிகளைப் பாதுகாக்கத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்" என்று குறிப்பிட்டு உள்ளார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் விக்டோரியா கெளரி, செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பெரியகருப்பன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, "இது ஒரு விசித்திரமான வழக்காகும். திருப்பத்தூர் தொகுதியில் இருந்த 1 தபால் வாக்குப் பெட்டி சிவகங்கைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் கேட்கப்பட்டதற்கும் சரியான பதில் அளிக்கவில்லை. தேர்தல் ஆணையத்துக்கும் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

தேர்தல் ஆணையத்தின் இந்த தவறால் தொடர்ந்து வெற்றி பெற்ற பெரியகருப்பனின் எதிர்காலம் மாறி உள்ளது. குறிப்பிட்ட வாக்குப் பெட்டியில் 100 வாக்குகளும் இருந்து இருக்கலாம். 1,000 வாக்குகளும் கூட இருக்கலாம். அதனால், திரும்ப மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டால் நிச்சயம் முடிவு மாறும் என நம்புகிறோம்.

தவறு நடைபெற்று உள்ள இந்த நேரத்தில் த.வெ.க வேட்பாளரை சட்டமன்ற உறுப்பினராக செயல்பட அனுமதிக்கப்போகிறா? என்பதை நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும். தவறான நோக்கத்துடன் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருந்தால் கடுமையான அபராதத்துடன் வழக்கை தள்ளுபடி செய்யலாம். ஒவ்வொரு வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டதும் அதில் யாருக்கு வாக்களிக்கப்பட்டது என தேர்தல் அதிகாரி அறிவிக்க வேண்டும். ஆனால், தேர்தல் அதிகாரி தெரிவிக்கவில்லை. திருப்பத்தூர் தொகுதியில் மொத்தமாக 2,275 தபால் வாக்குகள் பதிவாகி உள்ளது. வாக்குகள் நிராகரிக்கப்பட்டு உள்ளது. 

மொத்த வாக்குகள் எண்ணிக்கையில் தபால் வாக்குகள் சேர்க்கும் போது மறுபாடு ஏற்படுகிறது" என்று வாதிட்டார்.

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சிங்வி, "அவசர வழக்கு என்ற போர்வையில் தேர்தல் வழக்கை பெரிய கருப்பன் தாக்கல் செய்து உள்ளார். அவரது மனுவை விசாரணைக்கு ஏற்கக் கூடாது. தேர்தல் வழக்குகளை தனி நீதிபதி மட்டுமே விசாரிக்க முடியும் என்ற விதி உள்ளது. தேர்தல் முடிந்து 2 நாட்களுக்கு பின்பு தான் பெரிய கருப்பன் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார்.

புகார் குறித்து தேர்தல் ஆணையம் தான் விசாரணை நடத்த வேண்டும். தேர்தல் நடத்தும் அதிகாரி, பெரிய கருப்பன் கோரிக்கை நிராகரித்த நிலையில் இந்த வழக்கு தொடரப்பட்டு உள்ளதால் வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை" என்று வாதிட்டார்.

தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தருண், "ஒரு வாக்கு மாறி இருந்ததாக பெரிய கருப்பன் கூறுவது உண்மையாக இருந்தாலும், தேர்தல் வழக்கு தான் தொடர முடியும். அவசர வழக்கில் நிவாரணம் தேட முடியாது. பெரிய கருப்பனின் கோரிக்கையை ஏற்பதா ? வேண்டாமா ? என்பது குறித்து தேர்தல் நடத்தும் அதிகாரி தான் இறுதி முடிவு செய்வார். அவரது முடிவே இறுதியானது. சுமார் 338 தபால் வாக்குகள் செல்லாத வாக்குகளாக பதிவாகி உள்ளது. ஒரே பெயரில் இரு தொகுதிகள் இருந்தாலும், தொகுதிக்கான எண் அடிப்படையில் வாக்காளர்கள் பிரிக்கப்பட்டு தபால் வாக்குகள் பெறப்படும்.

தொகுதிக்கான எண், தொகுதியின் பெயர், அது எந்த மாவட்டத்தில் உள்ளது என சரி பார்க்கப்பட்ட பின்னரே தபால் வாக்குகள் ஏற்கப்படும் என்பதால் மாறுவதற்கு வாய்ப்பில்லை. சிறு தவறுகள் கூட ஏற்பட வாய்ப்பில்லை. வேறு தொகுதியில் ஒரு வாக்காளர் இருந்தாலும், அவர்களுக்கு உதவி செய்ய சேவை மையம் தேர்தல் ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. தபால் மூலம் அனுப்பப்படும் போது, அது எந்த மாவட்டத்தை சேர்ந்தது என பின்கோடு முறை மூலம் தபால் துறையால் பிரித்து அனுப்பப்பட்டது" என்றார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், "தேர்தல் ஆணையத்தில் ஒருவர் புகார் அளித்தால், அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்தது ஏன் ? தற்போது தேர்தல் வழக்கு தான் தொடர முடியும் என தேர்தல் ஆணையம் கூறுவதை ஏற்க முடியாது. ஒரு தொகுதியில் இருந்த வாக்குகள் அதே பெயரில் உள்ள மற்றொரு தொகுதிக்கு சென்று உள்ளது என தகவல் கிடைத்தும் ஏன் ?தேர்தல் நடத்தும் அதிகாரிகள் விசாரிக்கவில்லை ?" என்று கேள்வி எழுப்பினர்.

இந்த வழக்கு தொடர்பாக நாளை (மே 11) தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசார்ணையை ஒத்தி வைத்தனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: