தற்காலிக சபாநாயகராக கருப்பையா பதவியேற்பு !!!
முதலமைச்சர் விஜய் முன்னிலையில் தற்காலிக சபாநாயகராக கருப்பையாகப் பதவியேற்றுக் கொண்டார்.
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர், பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். அதைத் தொடர்ந்து என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன் உள்ளிட்ட 9 பேர் கொண்ட அமைச்சரவையும் பதவியேற்றுக் கொண்டது.
இதைத் தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவியேற்க ஏதுவாக நாளை (மே 11) சட்டப்பேரவை கூடவுள்ள நிலையில் தற்காலிக சபாநாயகராக கருப்பையா நியமிக்கப்பட்டு இருந்தார். அதன் தொடர்ச்சியாக, சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் இன்று (மே 10) மாலை 04.00 மணிக்கு நடந்த விழாவில், சோழவந்தான் எம்.எல்.ஏ கருப்பையா, தற்காலிக சபாநாயகராகப் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தற்காலிக சபாநாயகருக்கு ஆளுநர் பூங்கொத்து வழங்கி வாழ்த்துத் தெரிவித்தார். அதேபோல், ஆளுநர் மற்றும் முதலமைச்சருக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா பூங்கொத்து கொடுத்து வாழ்த்துப் பெற்றார். விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவிலும் முதலில் 'வந்தே மாதரம்' பாடல் பாடப்பட்டது என்பது கவனிக்கத்தக்கது.
தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்று உள்ள விஜய் மற்றும் புதிய அமைச்சரவைக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் தேநீர் விருந்து அளித்தார்.
இதை அடுத்து, நாளை (மே 11) சட்டமன்றத்தில் தமிழக வெற்றிக் கழகம் உள்பட 17-வது சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று உள்ள அனைவருக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார். வரும் மே 13- ஆம் தேதிக்குள் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முதலமைச்சர் விஜய்க்கு ஆளுநர் கெடு விதித்து இருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2011- ஆம் ஆண்டு மதுரை மாவட்டம், சோழவந்தான் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று இருந்த கருப்பையா, அதன் பிறகு நடந்த தேர்தல்களில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த நிலையில், தன்னை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்ட கருப்பையா, சோழவந்தான் தொகுதியில் த.வெ.க சார்பில் போட்டியிட்டு 63,907 வாக்குகளைப் பெற்று அபார வெற்றி பெற்று இருந்தார்.
சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சட்டமன்றத்திற்குள் நுழையும் அவருக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முதலமைச்சருமான விஜய் தற்காலிக சபாநாயகர் வாய்ப்பு வழங்கி உள்ளார்.

0 கருத்துகள்: