கண்ணகி கோயில் சித்ரா பௌர்ணமி திருவிழாவிற்காக திறக்கப்பட்ட மலைப்பாதை !!!
தமிழக - கேரளா எல்லையில் அமைந்து உள்ள கண்ணகி கோயில் சித்ரா பௌர்ணமி திருவிழாவிற்காக பளியன்குடி மலைப் பாதை திறக்கப்பட்டு உள்ளது.
தேனி மாவட்டம் கூடலூர் அருகே விண்ணேற்றிப்பாறை கடல் மட்டத்தில் இருந்து 5 ஆயிரம் அடி மலை உச்சியில் அமைந்து இருக்கிறது மங்கலதேவி கண்ணகி கோயில். சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு ஆண்டுதோறும் இந்த கோயிலில் சித்திரை முழுநிலவுத் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு இன்று (மே 1) இவ்விழா கொண்டாடப்படுகிறது.
இந்த விழாவிற்காக தமிழகத்தின் ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தேனி மாவட்டம் பளியன்குடி மலைப்பாதை திறக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், பளியன்குடியில் இருந்து 6.6 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கிற மங்கலதேவி கண்ணகி கோயிலுக்குச் செல்வதற்காக பக்தர்கள் இன்று தங்களது நடைபயணத்தை துவக்கி உள்ளனர்.
இந்த பாதை தவிர கேரளாவின் குமுளியில் இருந்தும் ஜீப் மூலமாக பெரியாறு புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கொக்கரக்கண்டம் மலைப்பாதையிலும் மங்கலதேவி கண்ணகி கோயிலுக்கு பக்தர்கள் சென்ற வண்ணம் உள்ளனர்.
இத்திருவிழாவை முன்னிட்டு தமிழகம் மற்றும் கேரள மாநில போலீசார், வனத்துறையினர் , தீயணைப்புத் துறையினர் மற்றும் சுகாதாரத்துறையினர் பக்தர்களின் பாதுகாப்புக்காக பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
பளியன்குடி மலைச் சாலை வழியாக கண்ணகி கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கு 5 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் பாட்டில் வழங்கப்படுகிறது.
இந்த பாதையானது புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதி என்பதால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருட்கள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் உள்ளிட்டவைகளை எடுத்துச் செல்லாதவாறு வனத்துறையினரால் சோதனை செய்த பிறகே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்து உள்ள பளியன்குடி கிராமத்தின் மலைப்பாதையானது கண்ணகி கோயிலுக்கு செல்லும் முக்கிய வழித்தடமாகவும், பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் பெரும்பாலும் தேர்ந்தெடுக்கும் பாதையாகவும் அறியப்படுகிறது.
இந்த பகுதியில் புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகம் இருப்பதாலும், காட்டுத் தீ பரவும் அபாயம் இருப்பதாலும் பாதுகாப்பு கருதி மற்ற நாட்களில் இந்த பாதையில் பயணிக்க பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. ஆண்டுக்கு ஒருமுறை சித்ரா பௌர்ணமி திருவிழாவிற்காக மட்டுமே இப்பாதை திறக்கப்படுகிறது.

0 கருத்துகள்: