வெள்ளி, 1 மே, 2026

நாட்டையே உலுக்கிய புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் மே 5 அன்று தீர்ப்பு !!!

SHARE

 நாட்டையே உலுக்கிய புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் மே 5 அன்று தீர்ப்பு !!!

ஐந்தாம் வகுப்பு பள்ளிச் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கருணாஸ் குற்றவாளி எனத் தீர்ப்பு அளித்த புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றம், அவருக்கான தண்டனை விவரம் மே 5 தேதி வழங்கப்படும் என்று தெரிவித்து உள்ளது.

முத்தியால்பேட்டை பகுதியில் வீட்டின் அருகே மார்ச் 2, 2024 அன்று 5 வகுப்பு பயின்றுவந்த சிறுமி விளையாடிக் கொண்டு இருந்தார். மதியம் 1 மணி அளவில் அவர் திடீரென மாயமானார். இதுகுறித்து பெற்றோர் முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் தேடி வந்தனர்.

இந்நிலையில், சிறுமி முத்தியால்பேட்டை எல்லையை தாண்டி செல்லவில்லை என்பதை காவல் துறையினர் உறுதி செய்தனர். இதனால் சிறுமி நடந்து சென்ற பகுதியில் உள்ள வீடுகளின் செப்டிக் டேங்குகள், குடிநீர் தொட்டிகளில் தவறி விழுந்து இருக்கலாமா என காவல் துறையினருக்கு சந்தேகம் எழுந்த நிலையில், அப்பகுதியில் தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாயமான சிறுமியை தேடும் பணி நடைபெற்று வந்த நிலையில், கூடுதலாக இரண்டு தனிப்படைகளும் அமைக்கப்பட்டன. மேலும், பொதுப் பணித்துறை ஊழியர்களை கொண்டு அப்பகுதியில் உள்ள பெரிய வாய்கால்களிலும் தேடும் பணி நடைபெற்றது.

அப்போது, மாயமான சிறுமி அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள வாய்காலில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், சிறுமியை இருவர் தூக்கி சென்றது உறுதி செய்யப்பட்டது.

அதனடிப்படையில், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த விவேகானந்தன் (56), கருணாஸ் (20) ஆகியோரை காவல் துறையினர் கைது செய்து காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்து இருந்தனர். தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கருணாஸ், விவேகானந்தன் ஆகிய இருவரும், வீட்டின் அருகே விளையாடிக் கொண்டு இருந்த சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்தது தெரிய வந்தது.

இதை அடுத்து, இருவரையும் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்த காவல் துறையினர், அவர்களை காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். இதில், விவேகானந்தன் 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சிறை கழிவறையில் தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில், கருணாஸ் மீதான வழக்கு விசாரணை புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் தலைமையிலான சிறப்பு குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வந்தது.

இந்நிலையில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பச்சையப்பன், குற்றவாளி கருணாசுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். இதைத்தொடர்ந்து, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம்சாட்டப்பட்ட கருணாஸ் குற்றவாளி என தீர்ப்பு அளித்தார்.

மேலும், இவருக்கான தண்டனை விவரம் மே மாதம் 5-ம் தேதி அறிவிக்கப்படும் எனக்கூறி வழக்கை ஒத்தி வைத்து உள்ளார். முதியவர் விவேகானந்தன் தற்கொலை செய்ததால் அவர் மீதான குற்றச்சாட்டுகள் ரத்து செய்யப்பட்டதாகவும் நீதிபதி தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: