திருவள்ளூரில் அம்மோனியா வாயு கசிந்த தொழிற்சாலையில் குழந்தை தொழிலாளர்களா? மாவட்ட ஆட்சியர் பதில் !!!
தற்காலிகமாக மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ள இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையின் தொழிலாளர்களை அவரவரின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் கூறி உள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் கடந்த 21 ஆம் தேதி அம்மோனியா வாயு கசிந்தது. இந்த விபத்தில் தற்போது வரை 10 பேர் உயிரிழந்து உள்ளனர். அதில், 15 வயது சிறுமிகள் இருவரும் அடங்குவர் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று (ஜூன் 24) திருவள்ளூர் ஆட்சியர் கவிதா, விபத்து நடைபெற்ற இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஆய்வு செய்தார். இறால் ஏற்றுமதி செய்யும் பகுதி உள்ளிட்ட இடங்களில் அவர் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து உணவுப் பாதுகாப்பு துறை, ஊரக வளர்ச்சி துறை, வருவாய் துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகளுடன் அவர் ஆய்வு கூட்டம் நடத்தினார். அத்துடன், தொழிற்சாலை நிர்வாகம் தரப்பில் உயிரிழந்தவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், நிலுவையில் உள்ள ஊதிய தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் ஆட்சியர் கவிதா அறிவுறுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தொழிற்சாலையில் உள்ள 200 டன் இறால்களை அப்புறப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதுவரை 10 பேர் உயிரிழந்து உள்ளதாகவும், அதில், 15 வயது சிறுமிகள் இருவரும் அடங்குவர் என்றும் தகவல் கிடைத்து உள்ளது. இதுகுறித்து ஆதார் கார்டு அடிப்படையில் விசாரணை நடத்தப்பட உள்ளது. குறிப்பாக, குழந்தை தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டார்களா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட உள்ளது.
மேலும், தற்போது மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ள தொழிலாளர்களை அவரவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. அதுவரை அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அரசு தரப்பிலேயே செய்யப்பட்டு வருகிறது. அவர்களுக்கு எந்த வசதியும் செய்து தரவில்லை என கூறுவது தவறான கருத்து. இதேபோல், ஆட்சியரை சந்திக்க விடவில்லை என கூறுவதும் தவறானது" என தெரிவித்தார்.
அரசு தரப்பில் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில், அவர்கள் சொந்த ஊருக்கு திரும்ப தயக்கம் காட்டுவதாகவும், இங்கேயே மாற்று வேலை ஏற்பாடு செய்து தரும்படி கோரிக்கை விடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.