15 நிமிடம் 2 வினாடிகள் இடைவிடாத பாரம்பரிய இசைப் நிகழ்ச்சி” ; 88 நாதஸ்வர, தவில் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள் ஒன்றிணைந்து ‘யுவா உலக சாதனை’- “கும்மி, கோலாட்டத்துடன் நடனம் !!!
நாதஸ்வரம் மற்றும் தவில் இசையுடன் நாட்டுப்புறக் கலைகளை இணைத்து 15 நிமிடம் 2 வினாடிகள் தொடர்ச்சியாக இசை வாசித்து நடனமாடி புதிய உலக சாதனை படைத்துள்ளனர் நாதஸ்வரம் மற்றும் தவில் இசை நாட்டுப்புற கலைஞர்கள் நல சங்கத்தினர்.
சூலூரில் தனியார் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த பிரம்மாண்ட நிகழ்வில், 88 நாதஸ்வரம் மற்றும் தவில் கலைஞர்கள் இடைவிடாது 15 நிமிடம் 2 வினாடிகள் இசை வாசித்தனர். அதே நேரத்தில் கும்மி, கோலாட்டம் உள்ளிட்ட பல்வேறு நாட்டுப்புறக் கலைஞர்கள் சோர்வின்றி தொடர்ந்து நடனமாடி பார்வையாளர்களை மெய்மறக்கச் செய்தனர்.
யுவா உலக சாதனை நிறுவனத்தின் அங்கீகாரத்துடன் நடைபெற்ற இந்த உலக சாதனை முயற்சி, தமிழரின் பாரம்பரிய இசை மற்றும் நாட்டுப்புறக் கலைகளின் மகத்துவத்தை உலக அரங்கில் உயர்த்திப் பிடித்தது. இசையின் இனிமை, கலையின் கம்பீரம் மற்றும் பண்பாட்டுப் பெருமை ஆகியவை ஒன்றிணைந்து தமிழர் பண்பாட்டின் வளத்தை உலகுக்கு எடுத்துக்காட்டிய நிகழ்வாக அமைந்தது.
நாதஸ்வரம் – தவில் இசை நாட்டுப்புற கலைஞர்கள் நல சங்கத்தின் தலைவர் எஸ். ஆண்டவன் இந்நிகழ்வை சிறப்பாக முன்னின்று வழிநடத்தினார். கோவை குணசித்திர நடிகை (இந்தியன் 2, கள்வன் ...)மீனா துணைத் தலைவராகப் பொறுப்பேற்று நிகழ்வின் வெற்றிக்கு முக்கியப் பங்களிப்பு வழங்கினார்.
யுவா உலக சாதனை நிறுவனத்தின் சார்பில் ஆர். சுரேஷ் மற்றும் பால்பாண்டி ஆகியோர் நடுவர்களாகச் செயல்பட்டு சாதனையை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தினர்.

0 கருத்துகள்: