திங்கள், 23 பிப்ரவரி, 2026

5 மாநில தேர்தல் தேதி: மார்ச் 10ல் அறிவிப்பா ?...

SHARE

 5 மாநில தேர்தல் தேதி: மார்ச் 10ல் அறிவிப்பா ?...

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம், அசாம் ஆகிய 5 மாநில சட்டப் பேரவைகளின் பதவிக்காலம் மே மற்றும் ஜூன் மாதங்களில் முடிவடைவதால் அங்கு தேர்தல் நடத்த தேவையான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. கடந்த 2021 ம் ஆண்டு பிப்ரவரி 26 ம் தேதி 5 மாநிலங்களிலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. 

ஆனால் தற்போது தேர்தல் தேதி அறிவிப்பு தாமதமாகி உள்ளது. அசாம் சுற்றுப் பயணம் செய்து அங்கு தேர்தல் நடைமுறைகளை ஆராய்ந்த தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் தலைமையிலான குழுவினர் வரும் பிப்ரவரி 26, 27 ல் தமிழ்நாடு வந்து ஆய்வு நடத்தி, அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனும், தேர்தல் அதிகாரிகள், உயர் போலீஸ் அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்த உள்ளனர். அதை தொடர்ந்து மார்ச் 1, 2 ம் தேதிகளில் மேற்குவங்கம் செல்ல உள்ளனர். அங்கு எஸ்.ஐ.ஆர் பணி முடிந்து பட்டியல் பிப்ரவரி 28 ம் தேதி வெளியாக உள்ளது.

 இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே தேர்தல் தேதி அறிவிப்பு தாமதமாகலாம் என்ற தகவல் பரவி இருக்கிறது.

இதற்கு இடையே மார்ச் 1 முதல் தேர்தல் நடைபெற உள்ள மேற்கு வங்கத்தில் மத்தியப் படைகள் நிறுத்தப்படும் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். முதற்கட்டமாக மேற்கு வங்கத்திற்கு 480 கம்பெனி படைகள் அனுப்பி வைக்கப்பட உள்ளன. மார்ச் 10 க்கு பிறகு மேற்குவங்கத்தின் தேர்தல் பாதுகாப்பு மத்திய படைகள் கண்காணிப்பில் தான் நடைபெறும் என்று அவர்கள் தெரிவித்தனர். இதை எல்லாம் வைத்து பார்க்கும் போது மார்ச் 10 ம் தேதிக்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. மேலும் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம் ஆகிய மாநிலங்களுக்கு ஒரே கட்ட தேர்தலும், மேற்குவங்கத்திற்கு 3 அல்லது 4 கட்ட தேர்தலும் நடைபெற வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிப்பு, மனுத் தாக்கல், பிரசாரம் உள்ளிட்ட அனைத்துக்கும் மொத்தமாக குறைந்தது 30 முதல் 40 நாட்கள் மட்டுமே இந்த முறை அவகாசம் வழங்கப்படும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: