கோவை தனியார் பள்ளி விடுதியில் பயங்கரம் : 26 அடி உயர மரத்தில் ஏறி விறகு உடைக்கச் சொன்ன நிர்வாகம் - மாணவர் கீழே விழுந்து படுகாயம் !!!
சமையல் எரிவாயு தீர்ந்ததால் மாணவர்களை மரம் ஏறச் சொல்லி கட்டாயப்படுத்திய அவலம் ; இடுப்பு எலும்பு முறிந்து 12-ம் வகுப்பு மாணவர் உயிருக்குப் போராட்டம் !!!
கோவை, பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள தனியார் பள்ளி விடுதியில், சமையல் எரிவாயு இல்லாததால் விறகு உடைக்க மரத்தில் ஏறுமாறு கட்டாயப்படுத்தப்பட்ட 12-ம் வகுப்பு மாணவர், 26 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை, பெரியநாயக்கன்பாளையம், ஜோதிபுரம் பகுதியில் 'பயனியர் மில்ஸ்' (Pioneer Mills) என்ற தனியார் மேல் நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு அருப்புக்கோட்டையைச் சேர்ந்த நந்தகுமார் என்ற மாணவர் 12-ம் வகுப்பு படித்துக் கொண்டே பள்ளி விடுதியிலும் தங்கி வருகிறார். இவரது தந்தை முக்கூரன் கூடலூர் கவுண்டம்பாளையம் நகராட்சியில் வாட்டர் ஆப்பரேட்டராகப் பணியாற்றி வருகிறார்.
கடந்த வியாழக்கிழமை பள்ளி விடுதியில் சமையல் எரிவாயு (Gas) தீர்ந்து விட்டதாகக் கூறப்படுகிறது. காலையில் மாணவர்களுக்கு 'பிரட்' (Bread) உணவாக வழங்கப்பட்டு உள்ளது.
மதிய உணவை விறகு அடுப்பில் சமைப்பதற்காக, அங்கு இருந்த ராஜ்குமார் என்பவர் நந்தகுமார் உள்ளிட்ட சில மாணவர்களைக் காய்ந்த மரத்தில் ஏறி விறகு உடைக்குமாறு வற்புறுத்தி உள்ளார்.
நிர்வாகத்தின் கட்டாயத்தால் சுமார் 26 அடி உயரம் உள்ள காய்ந்த மரத்தில் ஏறிய நந்தகுமார், எதிர்பாராத விதமாக மரக்கிளை உடைந்ததில் கீழே விழுந்தார். இதில் அவருக்கு இடுப்பு எலும்பு முறிந்து பலத்த காயம் ஏற்பட்டது.
விபத்து நடந்தவுடன் மாணவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், சுமார் ஒரு மணி நேரம் விடுதி அறைக்கு உள்ளேயே வைத்து ஐஸ்கட்டிகளைக் கொண்டு முதலுதவி செய்து மறைக்க முயன்று உள்ளனர். வலி தாங்க முடியாமல் மாணவர் துடித்ததைத் தொடர்ந்து, அங்கு இருந்த காவலாளியின் இருசக்கர வாகனத்தில் வைத்து ஜோதிபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர்.
மாணவர் காயம் அடைந்தது குறித்துப் பள்ளி நிர்வாகம் பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கவில்லை. அக்கம், பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் மருத்துவமனைக்கு விரைந்த பெற்றோர், பள்ளி நிர்வாகத்திடம் கேட்ட போது அவர்கள் முறையான பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இது தொடர்பாகப் பெரியநாயக்கன் பாளையம் காவல் நிலையத்தில் மாணவரின் தந்தை புகார் அளித்து உள்ளார். போலீசார் வழக்குப் பதிவு செய்து, மாணவர்களைப் படிப்பு தவிர்த்து ஆபத்தான வேலைகளில் ஈடுபடுத்தியது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 கருத்துகள்: