வெள்ளி, 27 மார்ச், 2026

சர்ச்சை பேச்சு: பொன்முடி மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை: ஐகோர்ட் உத்தரவு !!!

SHARE

 சர்ச்சை பேச்சு: பொன்முடி மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை: ஐகோர்ட் உத்தரவு !!!

சைவ, வைணவ சமயங்களை அவமதித்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

வெறுப்பு பேச்சு பேசியதாக தி.மு.க முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இது தொடர்பாகப் புகார்தாரர் 4 வாரங்களுக்குள் பதிலளிக்கவும் நீதிமன்றம் ஆணையிட்டு உள்ளது.

கடந்த 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவ மற்றும் வைணவ சமயங்கள் குறித்தும், பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்ததாகக் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையானது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பா.ஜ.க-வைச் சேர்ந்த சென்னை மாநகராட்சி கவுன்சிலர் உமா ஆனந்தன், சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தனிநபர் புகார் மனு ஒன்றைத் தாக்கல் செய்து இருந்தார்.

அந்தப் புகாரில், "மத ரீதியான வெறுப்புணர்வைத் தூண்டுதல் மற்றும் மத உணர்வுகளைப் புண்படுத்துதல்" ஆகிய பிரிவுகளின் கீழ் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி இருந்தார். பின்னர், இந்த மனு, மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகளை விசாரிக்கும் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. புகாரை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் பொன்முடி நேரில் ஆஜராக வேண்டும் எனச் சம்மன் அனுப்பி இருந்தார்.

 இந்த நடவடிக்கையை எதிர்த்துப் பொன்முடி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா முன்னிலையில் வியாழக்கிழமை நேற்று விசாரணைக்கு வந்தது.

பொன்முடி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, இத்தகைய புகார்கள் மீது வழக்குப் பதிவு செய்வதற்கு முன்பாக அரசிடம் உரிய அனுமதி பெற வேண்டும் என்ற சட்ட நடைமுறையைக் கீழ் நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை. இரு தரப்பினர் இடையே மோதலை ஏற்படுத்தும் நோக்கத்தில் பொன்முடி பேசவில்லை என்று வாதங்களை முன் வைத்தார்.

இந்த வாதங்களைப் பரிசீலித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் பொன்முடி மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இந்த விவகாரம் குறித்து 4 வார காலத்திற்குள் புகார்தாரர் உமா ஆனந்தன் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: