தி.மு.க அரசு கண்டித்து : தமிழக முழுவதும் தேசிய ஜனநாயக கூட்டணியினர் கண்டன ஆர்ப்பாட்டம் - ஏராளமான பங்கேற்பு !!!
தி.மு.க அரசை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) கட்சிகள் சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக, பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் பாஜக முன்னாள் மாநில தலைவர் கே. அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய அண்ணாமலை ,
“கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழகத்தில் காட்டாட்சி, குடும்ப ஆட்சி, பேயாட்சி போன்ற நிலை நிலவி வருகிறது. இந்த ஐந்து ஆண்டுகளாக அதை பொறுத்துக்கொண்டு அரசியல் பணியை தொடர்ந்து செய்து வரும் அனைத்து கட்சித் தொண்டர்களுக்கும் என் நன்றியை தெரிவிக்கிறேன்.
மார்ச் 8ஆம் தேதி மகளிர் தினத்தை கொண்டாடிக் கொண்டிருந்த நேரத்தில், 72 வயது முதியவர் தூங்கிக்கொண்டிருந்தபோது அவரது தலையில் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டார். அவரது மனைவியிடம் பாலியல் வன்கொடுமை நடத்தப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் பெண்களுக்கு எதிராக 8008 கொலை சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக அரசு தரவுகள் தெரிவிக்கின்றன. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் 2080 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் 39,999 என உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. கூட்டு பாலியல் பலாத்காரம் சம்பவங்கள் அதிகரித்து உள்ளன.
2021ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் நடந்த சம்பவம் உட்பட பல்வேறு இடங்களில் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. திமுக தொடர்புடையவர்களே தவறுகளில் ஈடுபடுகின்றனர்.
தமிழகத்தில் டிஜிபி பதவி முறையாக நிரப்பப்படவில்லை. காவல்துறை கைகளை கட்டிவைத்து உள்ளனர். கோவை புதூரில் காவல்துறை அதிகாரி ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய சம்பவமும் நடந்துள்ளது.
போதைப்பொருள் பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் 65 ஆயிரம் கிலோ கஞ்சா மற்றும் 8025 கிலோ செயற்கை போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது மாநிலத்தின் நிலையை காட்டுகிறது.
அரசு வேலை வாய்ப்புகள் குறித்து கூறிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. டாஸ்மாக் மூலம் 1495 கோடி பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் பெரும் அளவில் ஊழல் நடந்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.
மாநிலத்தில் பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள் என யாருக்கும் பாதுகாப்பு இல்லை. இந்த ஆட்சியை மாற்ற மக்கள் ஒன்றுபட வேண்டும். வரும் தேர்தலில் மாற்றம் உறுதி செய்யப்பட வேண்டும்” என அவர் பேசினார்.

0 கருத்துகள்: