ஞாயிறு, 22 மார்ச், 2026

தி.மு.க எனும் துரியோதனக் கூட்டத்தை வீழ்த்தும் பஞ்சபாண்டவர்கள்" - டெல்லியில் டி.டி.வி.தினகரன் அதிரடிப் பேட்டி !!!

SHARE

 தி.மு.க எனும் துரியோதனக் கூட்டத்தை வீழ்த்தும் பஞ்சபாண்டவர்கள்" - டெல்லியில் டி.டி.வி.தினகரன் அதிரடிப் பேட்டி !!!

தமிழகத்தில் அ.தி.மு.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்னும் தொகுதிப் பங்கீடு நடைபெறவில்லை. அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், பா.ம.க தலைவர் அன்புமணி ஆகியோர் அதிக தொகுதிகள் கேட்பதாகவும், அதற்கு அ.தி.மு.க பொதுச் செயலாளர் பழனிசாமி மறுப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. வேட்புமனு தாக்கல் தேதி நெருங்கி வரும் நிலையில், தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்ட பழனிசாமி கடந்த 19-ம் தேதி டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

அவரைத் தொடர்ந்து டி.டி.வி.தினகரனும் அன்புமணியும் டெல்லி புறப்பட்டுச் சென்று அமித் ஷாவை சந்தித்தனர். இந்த சந்திப்புக்கு பின், தினகரன் டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது: 

டெல்லியில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா மற்றும் பியூஷ் போயல் ஆகியோரைச் சந்தித்தேன்.

இந்த சந்திப்பில் தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் தி.மு.க-வை வீழ்த்த எவ்வாறு வியூகம் அமைத்துச் செயல்பட வேண்டும் என்பது குறித்து அவர்களின் கருத்துகளை கேட்டறிந்தேன். இவர்கள் ஒவ்வொரு விஷயத்தையும் சென்னையில் வந்து அமர்ந்து பேச முடியாது. அதனால் பழனிசாமி டெல்லி வந்து, பா.ஜ.க-வுக்கான தொகுதிகள் குறித்து பேசி இருக்கலாம். இந்த சந்திப்பில் நான் தொகுதி பங்கீடு குறித்து எதுவும் பேசவில்லை.

பிஹாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி எப்படி தேர்தலை எதிர்கொண்டு மாபெரும் வெற்றி பெற்றார்களோ அதுபோல தமிழகத்திலும் வெற்றி பெற தேசிய ஜனநாயக கூட்டணி எப்படி ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று பேசுவதற்குத் தான் என்னை அழைத்து இருந்தார்கள். இந்தத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை.

மத்திய அரசு கடந்த 12 ஆண்டுகளில் ரூ,12 லட்சம் கோடிக்கு மேல் தமிழகத்துக்கு நிதி வழங்கி உள்ளது. 2004 முதல் 2014-ம் ஆண்டு வரை காங்கிரஸ் கூட்டணியில் திமுக இருக்கும் போது ரூ.3 லட்சம் கோடி தான் தமிழகத்துக்கு வந்து இருக்கிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனுக்காக மத்திய அரசு நிதி வழங்கினால் அதை மகளிர் உரிமை தொகையாக முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார்.

தி.மு.க ஆட்சியில் பணி நியமனத்தில், பணியிட மாற்றத்தில் ஊழல் செய்து வருகிறார்கள். நாங்கள் டெல்லிக்கு வந்தாலே பயந்து நடுங்குகின்றனர். பிஹாரைப் போல ஒவ்வொரு தொகுதி, ஒவ்வொரு வாக்குச்சாவடி அளவில் ஒற்றுமையாக இருந்து மக்களைச் சந்தித்து தேர்தல் பணியாற்றி வெற்றி பெறுவோம்.


தி.மு.க என்ற துரியோதனக் கூட்டத்தை வீழ்த்த பஞ்சபாண்டவர் போன்ற எங்கள் கூட்டணி வலிமையாக இருக்கிறோம். தி.மு.க என்ற தீய சக்தியை வீழ்த்த தமிழக மக்கள் தயாராகி விட்டார்கள். அதற்கு ஒரே மாற்று சக்தி அ.தி.மு.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தான். இவ்வாறு அவர் கூறினார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: