பாகிஸ்தான் தொடர்புகள், பிரத்யேக 'CAPTAIN M NETWORK' செயலி கண்டுபிடிப்பு: லக்னோவிற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை!
அல்கொய்தா பயங்கரவாத சித்தாந்த ஆதரவு ஆன்லைன் குழுவில் தொடர்பில் இருந்த உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயது இளைஞர் மக்சூத் அலி என்பவரைக் கோவை பயங்கரவாத தடுப்புப் பிரிவு (ATS) போலீசார் கைது செய்து, உத்திரப் பிரதேச மாநில பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
உ.பி. அனிமேட்டர் முகமது நபீல் கைது பின்னணி:
சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் இளைஞர்களை ஒருங்கிணைத்து, இந்திய நாட்டிற்கு எதிரான சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடச் சதித் திட்டம் தீட்டப்படுவதாக உத்திரப் பிரதேச மாநில பயங்கரவாத தடுப்புப் பிரிவு (ATS) போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்திய உ.பி. போலீசார், கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி உத்திரப் பிரதேச மாநிலம் ஆசம்கரைச் சேர்ந்த முகமது நபீல் என்பவரைக் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த மக்சூத் அலி (19) என்பவர் ஆன்லைன் தொடர்புகளைப் பாதுகாப்பாக மேற்கொள்ளப் பிரத்யேகச் செயலிகளை வடிவமைத்து இயக்கி வந்தது வெளிச்சத்திற்கு வந்தது.
பெங்களூரு ஊழியர் கோவையில் தங்கியிருந்தது அம்பலம்:
பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த மக்சூத் அலி, உத்திரப்பிரதேசத்தில் இருந்து கோவைக்கு வந்து, இங்குள்ள ஹோப் காலேஜ் (Hopes College) பகுதியில் ரகசியமாக அறை எடுத்துத் தங்கி இருந்தது உ.பி. போலீசார் நடத்திய ஆன்லைன் கண்காணிப்பில் தெரியவந்தது.
மக்சூத் அலி கோவையில் தங்கி இருப்பதை அறிந்த உ.பி. பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார், உடனடியாகக் கோவை நகரப் பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
ஹோப் காலேஜில் அதிரடிக் கைது:
தகவல் கிடைத்த உடனடியாக விரைந்து செயல்பட்ட கோவை பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார், ஹோப் காலேஜ் அறையிலிருந்து மீண்டும் பெங்களூரு புறப்படத் தயாராக இருந்த மக்சூத் அலியைச் சுற்றி வளைத்துக் கைது செய்தனர்.
பின்னர் அவர் உத்திரப் பிரதேச பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசாரிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டார். அதனை அடுத்து, அவரைப் பி வாரண்ட் மூலம் கைது செய்த உ.பி. போலீசார், மேலதிக விசாரணைக்காக உத்திரப் பிரதேச மாநிலம் லக்னோவிற்கு அழைத்துச் சென்றனர்.
'CAPTAIN M NETWORK' செயலி & பாகிஸ்தான் தொடர்புகள்:
கைது செய்யப்பட்ட நபர்கள் மீது கடுமையான சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன:
பிரத்யேக செயலி:
மக்சூத் அலி "CAPTAIN M NETWORK" என்ற பிரத்யேகச் செயலியைத் தானே உருவாக்கி, அதன் மூலம் முகமது நபீல் உள்ளிட்ட தீவிரவாத சித்தாந்த ஆதரவாளர்களுடன் இரகசியமாகப் பேசி வந்து உள்ளார்.
பாகிஸ்தான் எண்கள்:
இவரது கைபேசியில் உள்ள இரு வாட்ஸ்அப் (WhatsApp) கணக்குகளிலும், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பல சந்தேகத்திற்குரிய எண்கள் இணைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
கோவை பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசாரும், உத்திரப் பிரதேச போலீசாரும் இணைந்து இந்த அதிரடிச் சோதனையை நடத்தி உள்ளனர்.
கோவையில் தங்கி இருந்த காலத்தில் மக்சூத் அலிக்கு உள்ளூரில் ஏதேனும் நபர்களுடன் தொடர்புகள் இருந்ததா, அவர் கோவைக்கு வந்ததன் முக்கிய நோக்கம் என்ன என்பது குறித்துத் தமிழகப் புலனாய்வுத் துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துகள்: