தேர்தல் கட்டுப்பாடு: கோவையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ரத்து - மனுக்களைப் போட பெட்டி வசதி !!!
நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை; தேர்தல் முடியும் வரை திங்கட்கிழமை முகாம்கள் கிடையாது !!!
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான அட்டவணையை இந்தியத் தேர்தல் ஆணையம் நேற்று (மார்ச் 15) வெளியிட்டதைத் தொடர்ந்து, கோவை மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் (MCC) மிகத் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு உள்ளன.
இதன் ஒரு பகுதியாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் நடைபெற்று வந்த 'மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்' (Grievance Day Meeting) தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, வாக்காளர்கள் மீது செல்வாக்கு செலுத்தும் வகையிலான அரசு முகாம்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளுக்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
மனுக்களைப் போட சிறப்புப் பெட்டி:
பொதுமக்களின் கோரிக்கைகள் தடைபடாமல் இருப்பதை உறுதி செய்ய, மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் 'மக்கள் குறைதீர்வு மனுக்கள் பெறும் பெட்டி' வைக்கப்பட்டு உள்ளது. "நேரடி முகாம்கள் கிடையாது என்றாலும், பொதுமக்கள் தங்கள் மனுக்களை இந்தப் பெட்டியிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம்" என மாவட்டத் தேர்தல் அதிகாரியும் ஆட்சியருமான கிராந்தி குமார் தெரிவித்து உள்ளார். இந்தப் பெட்டியில் சேகரமாகும் மனுக்களை முறைப்படுத்துவதற்காகத் தனியே பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். பெட்டி நிறைந்தவுடன் மனுக்கள் பாதுகாப்பாகச் சேகரிக்கப்பட்டு, உரியத் துறை அதிகாரிகளுக்கு ஆய்விற்காக அனுப்பி வைக்கப்படும்.
தேர்தல் நடத்தை விதிகள் திரும்பப் பெறப்படும் வரை (மே 10 வரை) இந்த நடைமுறை தொடரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுமட்டுமின்றி, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்த அரசு சாதனைகளை விளக்கும் புகைப்படங்கள் மற்றும் விளம்பரத் தட்டிகள் அனைத்தும் நேற்று இரவே அகற்றப்பட்டன.
தேர்தல் கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால், அவசரத் தேவைகளுக்காகவும் புகார்களைத் தெரிவிக்கவும் 24 மணி நேரமும் இயங்கும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் 'C-Vigil' செயலியைப் பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

0 கருத்துகள்: