கோவையில் கொட்டியது 'ஆலங்கட்டி' மழை : கோடை வெப்பத்தைத் தணித்த ஆலங்கட்டி மழையால் விவசாயிகள், பொதுமக்கள் உற்சாகம் !!!
கோவை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகக் கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், இன்று மதியம் முதல் புறநகர்ப் பகுதிகளில் பரவலாகப் பெய்த ஆலங்கட்டி மழை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
வெப்பத்தின் தாக்கத்தால் அவதிப்பட்டு வந்த கோவை மக்களுக்கு, இந்தத் திடீர் மழை ஒரு வரப்பிரசாதமாக அமைந்து உள்ளது.
கோவை புறநகர்ப் பகுதிகளான தொண்டாமுத்தூர், ஆலாந்துறை, விராலியூர், தீத்திபாளையம், ஒத்தக்கால் மண்டபம், மதுக்கரை, மலுமிச்சம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் திடீரெனக் கருமேகங்கள் சூழ்ந்து இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
மழையின் போது சிறிய அளவிலான ஆலங்கட்டிகள் (Hailstones) விழுந்ததைக் கண்டு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர். சாலைகளில் சிதறிக் கிடந்த ஆலங்கட்டிகளைக் கைகளில் ஏந்தி பொதுமக்கள் உற்சாகமாகக் கொண்டாடினர்.
கடந்த சில நாட்களாக 35 டிகிரி செல்சியஸிற்கு மேல் பதிவாகி வந்த வெயிலால் பயிர்கள் வாடும் நிலையில் இருந்தன. இந்தத் திடீர் மழையினால் நிலத்தடி நீர்மட்டம் ஓரளவு உயரும் என்றும், தென்னை மற்றும் காய்கறிப் பயிர்களுக்கு இது மிகுந்த நன்மையைத் தரும் என்றும் விவசாயிகள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளனர்.

0 கருத்துகள்: