மூதாட்டியிடம் செயின் பறிப்பு - வெளியான பரபரப்பு சி.சி.டி.வி காட்சிகள் !!!
மூதாட்டியிடம் தங்கச் செயின் பறிப்பு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு 3 பேரை கைது செய்து உள்ளனர்.
வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே கீழ்வடுங்குட்டைப் பகுதியில் சுமதி (வயது 63) என்ற மூதாட்டி தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் முன்புறத்தில் ஒரு சிறிய அளவிலான மளிகைக் கடை நடத்தி வருகிறார். கடந்த மார்ச் 09- ஆம் தேதி இரவு இரண்டு மர்ம நபர்கள் கடைக்கு வாடிக்கையாளர்களை போல் வந்து உள்ளனர். அதில் ஒருவர் பொருட்களை வாங்கிக் கொண்டு பணம் கொடுக்கும் போது சில்லறைக் கேட்டு மூதாட்டியின் கவனத்தைத் திசை திருப்பினார்.
அப்போது மூதாட்டி நாணயங்களை எடுத்துக் கொண்டு இருந்த போது கடையின் முன்புறம் உள்ள இரும்பு வலையில் சிறிய இடைவெளி வழியாக கையை உள்ளே நுழைத்து அவர் அணிந்து இருந்த 5 சவரன் தங்கச் செயினைப் பறித்துக் கொண்டு தப்பி ஓடினர். செயின் பறிக்கப்பட்டதும் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி
"திருடன், திருடன்....” எனக் கூச்சலிட்டார். அதற்குள் மர்ம நபர்கள் வெளியே காத்து இருந்த இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பித்து ஓடினர். வாகனம் ஓட்டியவர் ஹெல்மெட் அணிந்து இருந்தும், பின்னால் அமர்ந்து இருந்தவர் தொப்பி அணிந்து முகத்தை மறைத்து இருந்ததும் தெரிய வந்தது.
இந்த சம்பவத்தில் மூதாட்டிக்கு கழுத்தில் சிறிய காயம் ஏற்பட்டது. அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. காட்சிகளை ஆய்வு செய்த காட்பாடி காவல் துறையினர், மர்ம நபர்கள் பல நாட்களாக கடைக்கு வந்து வாடிக்கையாளர்களைப் போல் நடித்து சூழ்நிலையைக் கவனித்து வந்ததைக் கண்டுபிடித்தனர். அத்துடன் அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனம் பல்சர் என்பதும் தெரிய வந்தது.
இந்த சம்பவம் குறித்து காட்பாடி காவல் துறையினர் வழக்குப் பதிவுச் செய்து தீவிரமாக தேடி வந்த நிலையில் இன்று காட்பாடியைச் சேர்ந்த ரோல்ஸ்டன் (வயது 40), அலமேலு மங்காபுரத்தைச் சேர்ந்த பாஸ்கர் (வயது 45), திருவண்ணாமலையைச் சேர்ந்த விஜயகுமார் (வயது 47) ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். அத்துடன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.


0 கருத்துகள்: