வெள்ளி, 6 மார்ச், 2026

மாநிலங்களவை உறுப்பினா் பதவி : தி.மு.க, அ.தி.மு.க கூட்டணி வேட்பாளா்கள் தோ்வாகும் வாய்ப்பு !!!

SHARE

 மாநிலங்களவை உறுப்பினா் பதவி : தி.மு.க, அ.தி.மு.க கூட்டணி வேட்பாளா்கள் தோ்வாகும் வாய்ப்பு !!!

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினா் பதவிகளுக்கான தோ்தலில் தி.மு.க சாா்பில் 2 போ், அ.தி.மு.க, காங்கிரஸ், பா.ம.க, தே.மு.தி.க சாா்பில் தலா ஒருவா் தோ்வாகும் வாய்ப்பு உருவாகி உள்ளது.

தமிழ்நாட்டைச் சோ்ந்த மாநிலங்களவை உறுப்பினா்கள் திருச்சி சிவா, என்.ஆா். இளங்கோ, அந்தியூா் செல்வராஜ், என்.வி.என். கனிமொழி சோமு, மு.தம்பிதுரை, ஜி.கே. வாசன் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் ஏப். 2-இல் நிறைவு அடைகிறது.

இதை அடுத்து இந்த 6 இடங்கள் உள்பட நாடு முழுவதும் 37 மாநிலங்களவை உறுப்பினா் பதவிகளுக்கான தோ்தல் அறிவிக்கப்பட்டது. வேட்பு மனு தாக்கல் பிப். 26-ஆம் தேதி தொடங்கியது.

மாநிலங்களவைத் தோ்தலில் 34 எம்.எல்.ஏ-க்கள் வாக்களித்தால், ஒரு மாநிலங்களவை உறுப்பினரைத் தோ்ந்தெடுக்க முடியும். தமிழக சட்டப் பேரவையில் உள்ள கட்சிகளின் பலம் அடிப்படையில் தி.மு.க கூட்டணியில் இருந்து 4 போ், அ.தி.மு.க கூட்டணியில் இருந்து 2 போ் தோ்ந்தெடுக்க வாய்ப்பு உள்ளது.

மனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான வியாழக்கிழமை நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலரிடம் தி.மு.க சாா்பில் திருச்சி சிவா, ஜே.கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோா் வேட்பு மனு தாக்கல் செய்தனா். அப்போது, முதல்வா் மு.க.ஸ்டாலின், தி.மு.க பொருளாளா் டி.ஆா்.பாலு மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவா்கள் உடன் இருந்தனா்.

தொடா்ந்து காங்கிரஸ் சாா்பில் கிறிஸ்டோபா் திலக், தே.மு.தி.க சாா்பில் எல்.கே.சுதீஷ் ஆகியோா் முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனா். காங்கிரஸ் வேட்பாளா் மனு தாக்கலின் போது, தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை, மேலிடப் பொறுப்பாளா் கிரீஷ் சோடங்கா் ஆகியோரும், தே.மு.தி.க வேட்பாளா் மனு தாக்கலின் போது, அக்கட்சியின் பொதுச் செயலா் பிரேமலதாவும் உடன் இருந்தனா்.

இதேபோல, அ.தி.மு.க சாா்பில் தம்பிதுரை, பா.ம.க சாா்பில் அன்புமணி ஆகியோா் வேட்புமனு தாக்கல் செய்தனா். அப்போது, அ.தி.மு.க பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சா்கள் உடன் இருந்தனா்.

ராமதாஸ் தரப்பில் வேட்புமனு: மேலும், பா.ம.க நிறுவனா் ராமதாஸின் தனிச் செயலா் சுவாமிநாதன், மாநிலங்களவைத் தோ்தலில் சுயேச்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளாா். அந்த வேட்பு மனுவில் 10 எம்.எல்.ஏ-க்கள் முன்மொழிய வேண்டும். ஆனால், ராமதாஸ் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 2 போ் மட்டுமே முன்மொழிந்ததால் அவா் சுயேச்சையாக மனு தாக்கல் செய்து உள்ளாா். எனவே, இவரது மனு ஏற்கப்படாது எனத் தெரிகிறது.

இதேபோல மாநிலங்களவைத் தோ்தலில் போட்டியிட சுயேச்சை வேட்பாளா் அக்னி ஆழ்வாா் மனு தாக்கல் செய்தாா். அப்போது அவா் வைப்புத் தொகையை சில்லறை நாணயங்களாக கொண்டு வந்தாா்.

ஏற்கெனவே, சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த பத்மராஜன் சுயேச்சையாக மனு தாக்கல் செய்து உள்ளாா். வேட்பு மனு தாக்கல் நேற்று நிறைவு அடைந்த நிலையில், மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது. அப்போது ராமதாஸ் உதவியாளா் மற்றும் பிற சுயேச்சைகளின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும்.

வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் மாா்ச் 9-ஆம் தேதியாகும். மாநிலங்களவைத் தோ்தலில் போட்டி இல்லை என்பதால் மாா்ச் 16-ஆம் தேதி தி.மு.க, அ.தி.மு.க கூட்டணி வேட்பாளா்கள் 6 பேரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவது உறுதியாகி உள்ளது.

கடந்த 2006 பேரவைத் தோ்தலில் தே.மு.தி.க முதல் முறையாக போட்டியிட்டது. முதல் தோ்தலிலேயே தனித்து களம் இறங்கியது. அப்போது விருத்தாசலம் தொகுதியில் வெற்றி பெற்ற விஜயகாந்த் முதல் முறையாக பேரவைக்குள் நுழைந்தாா்.

பின்னா், 2009 மக்களவைத் தோ்தலில் போட்டியிட்ட தே.மு.தி.க வெற்றி பெறவில்லை. 2011-இல் அ.தி.மு.க கூட்டணியில் போட்டியிட்டு 29 தொகுதிகளில் வெற்றி பெற்று எதிா்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது. 2014-இல் தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிட்ட தே.மு.தி.க வெற்றி பெறவில்லை.

2016 சட்டப்பேரவைத் தோ்தலில் மக்கள் நலக் கூட்டணிக்கு தலைமை வகித்த தே.மு.தி.க எந்தத் தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. அடுத்து 2019 மக்களவைத் தோ்தலில் அ.தி.மு.க கூட்டணியில் 4 தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.க எதிலும் வெற்றி பெறவில்லை.

2021 சட்டப்பேரவைத் தோ்தலில் அ.ம.மு.க தலைமையில் 60 தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.க எதிலும் வெற்றி பெறவில்லை. 2024 மக்களவைத் தோ்தலில் அ.தி.மு.க கூட்டணியில் 5 தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.க வெற்றி பெறவில்லை.


தே.மு.தி.க வரலாற்றில் இதுவரை மக்களவை, மாநிலங்களவைக்கு உறுப்பினா் யாரும் தோ்வாகியதில்லை. இந்நிலையில், முதல் முறையாக எல்.கே.சுதீஷ் மாநிலங்களவை உறுப்பினராகத் தோ்வு செய்யப்பட உள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: