கோவை தெற்கில் 'கரூர் டீம்' அட்ராசிட்டி? - 15 சுயேச்சைகள் களமிறங்கிய பின்னணி !!!
ஒரே நோட்டரியிடம் கையெழுத்து.. ஒருமித்த ஆதரவு.. திமுக-வுக்கு 'பி-டீம்' என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு....
கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் களம் வினோதமான திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. கரூரைச் சேர்ந்த 18 பேர் இந்தத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட மனுத் தாக்கல் செய்து இருந்த நிலையில், அவர்களில் 3 பேர் வாபஸ் பெற்று உள்ளனர். தற்போது எஞ்சி உள்ள 15 கரூர் மாவட்ட சுயேச்சைகளும் கோவை தெற்கில் களம் காண்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பி உள்ளது.
கோவை தெற்கு தொகுதியில் வேட்பு மனுக்கள் இறுதி செய்யப்பட்டு, தேர்தல் களம் சூடுபிடித்து உள்ள நிலையில், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுயேச்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை அனைவரையும் புருவம் உயர்த்த வைத்து உள்ளது. ஆரம்பத்தில் கரூரில் இருந்து 18 பேர் மனுத் தாக்கல் செய்து இருந்தனர். இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான போது, அதில் மூன்று பேர் தங்களது மனுக்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டனர்.
இதை அடுத்து, தற்போது 15 கரூர் மாவட்ட சுயேச்சைகள் கோவை தெற்கில் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், இவர்கள் அனைவரும் கரூரில் உள்ள ஒரே நோட்டரியிடம் கையெழுத்து வாங்கி மனுத் தாக்கல் செய்து உள்ளனர். இவர்கள் ஒரு குழுவாகக் கோவையில் முகாமிட்டுப் பணியாற்றி வருவதாகவும், தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாகவும், வாக்குகளைப் பிரிக்கவும் திட்டமிட்டுச் செயல்படுவதாக அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டி வருகின்றனர்.
ஒரே மாவட்டத்தைச் சேர்ந்த இத்தனை பேர் தங்களது ஊரை விட்டு விட்டு, கோவையில் வந்து சுயேச்சையாகப் போட்டியிடுவதன் பின்னணியில் பெரிய 'பாலிடிக்ஸ்' (Politics) இருப்பதாகக் கூறப்படுகிறது. இவர்களுடைய தேர்தல் செலவுகள் மற்றும் செயல்பாடுகளைத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் மிகத் தீவிரமாகச் கண்காணிக்க வேண்டும் என்றும், பணப் பட்டுவாடா ஏதும் நடக்கிறதா ? என்பதைக் கண்காணிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். கோவையில் 'கரூர் டீம்' இறக்கப்பட்டு இருப்பது, தெற்கு தொகுதியின் தேர்தல் முடிவுகளில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் .....


0 கருத்துகள்: