ஏப்ரல் 23 ல் எடப்பாடி பழனிசாமிக்கு முடிவு கட்டப்படும் ; தேர்தல் பரப்புரையில் ஸ்டாலின் சபதம் !!!
எல்லாருக்கும் மரணம் வரும், இந்த ஸ்டாலினுக்கும் வரும். ஆனால், நான் கொண்டு வந்த திட்டங்கள் மண்ணில் இருக்கும் வரை நான் தான் தமிழ்நாட்டை ஆளுகிறேன் என்று அர்த்தம்" என மறைமலைநகர் தேர்தல் பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
2026 சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் வருகின்ற 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சார பணியில் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் தி.மு.க-வின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துக் கொண்ட தி.மு.க தலைவரும், தமிழக முதலமைச்சருமான முக ஸ்டாலின், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 12 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட இருக்கும் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.
அப்போது பேசிய அவர், எல்லாருக்கும் மரணம் வரும், இந்த ஸ்டாலினுக்கும் வரும். ஆனால், நான் கொண்டு வந்த காலை உணவுத் திட்டம், நான் முதல்வன், மக்களைத் தேடி மருத்துவம் போன்ற திட்டங்களுக்கு ஒருபோதும் மரணம் வராது. அவற்றை மண்ணில் புதைக்கவும் முடியாது. இந்தத் திட்டங்கள் மண்ணில் இருக்கும் வரை ஸ்டாலின் தான் தமிழ்நாட்டை ஆளுகிறான் என்று அர்த்தம் என்று பெருமிதத்துடன் பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், தற்போது நடைமுறையில் உள்ள காலை உணவுத் திட்டம், தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் 8 ஆம் வகுப்பு வரை நீட்டிக்கப்படும். ரூ. 20 லட்சம் மதிப்பிலான மோட்டார் பம்புகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் தொழிற்சாலைகள் மேலும் மேம்படுத்தப்படும் என்று அடுக்கடுக்கான வாக்குறுதிகளை அளித்தார்.
2021 தி.மு.க ஆட்சியில் கொரோனா 2.0 வந்தது. தி.மு.க அப்போதும் திறம்பட செயல்பட்டது என்று கூறிய அவர், நான் பதவியேற்ற உடன் நந்தம்பாக்கம் கொரோனா வார்டுக்கு சென்று ஆய்வு செய்தேன். தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் மழை, வெள்ளம் பாதிப்பு ஏற்பட்டாலும் நேரடியாக சென்று ஆய்வு செய்தவன் நான் என்றார்.
திராவிட மாடல் ஆட்சியில் செய்யூர், ஆலந்தூரில் அரசு கல்லுரி, தாம்பரத்தில் புதிய மருத்துவமனை, மாமல்லபுரத்தில் நவீன பேருந்து நிலையம், தாம்பரத்தில் தோழி விடுதி திட்டங்கள் கொண்டு வரப்பட்டது என்றவர், ஆலந்தூரில் ஹஜ் பயணிகள் ஓய்வு கூடம், கடல்நீர் குடிநீராக்கும் திட்டம் என்று தி.மு.க ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு திட்டங்களை பட்டியலிட்டார்.
கூவத்தூரில் கூத்து அடிச்சவர்கள் அ.தி.மு.க வினர் என்று விமர்சித்த ஸ்டாலின், காத்து இருந்து பாருங்க பழனிசாமி, வரும் 23 ஆம் தேதி உங்களுக்கு முடிவு காட்டபடும் என்று காட்டமாக தெரிவித்தார். அ.தி.மு.க பெயரில் இருந்து அண்ணா பெயர், திராவிடம் என்ற பெயரை நீக்குங்கள். காவி வேட்டி கட்டிகொள்ளுங்கள். அ.தி.மு.க வேரோடு வீழ்த்தப்படும். டபுள் எஞ்ஜின் கூட்டணி, தி.மு.க-வின் நல்ல திட்டங்களை அழிக்க வருகிறது. ஆகையால், தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு பெருவாரியான வாக்கினை அளிக்க வேண்டும்" என்று வாக்காளர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.
இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் பேசுகையில்,
"மல்லிகார்ஜுன கார்கே சார்பாகவும், ராகுல் காந்தி சார்பாகவும் இங்கே ஒன்றை தெரிவிக்க விரும்புகிறேன். நாங்கள் அனைவரும் முதலமைச்சர் ஸ்டாலின் உடன் உறுதியாக உள்ளோம்.
அரசியல் களம் என்பது ஒரு வேளாண்மை போன்றது. முதலில் நிலத்தை சரி செய்ய வேண்டும். பின்னர் நிலத்தை பதப்படுத்தி நாற்று நட வேண்டும். கலை எடுக்க வேண்டும். அறுவடை காலத்தில், அறுவடை செய்ய வேண்டும் அதுதான் உண்மையான அரசியல். தி.மு.க-வும், காங்கிரஸும் 40-50 ஆண்டுகளாக பின்னிப்பிணைந்து உறவாக இருக்கின்றன. இந்த உறவை பிரிப்பது எந்த காலத்திலும், யாராலும் முடியாது" என்றார்.

0 கருத்துகள்: