அரசியல் கட்சிகளுக்கு பணம் கொடுத்ததாக குற்றச்சாட்டு; பிரபல நகைக் கடையில் வருமான வரித்துறை திடீர் சோதனை !!!
ஆற்காட்டில் உள்ள பிரபல நகைக் கடையில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் உள்ள பிரபல நகைக்கடையில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். 2026 சட்டமன்ற தேர்தல் திருவிழா தமிழகத்தில் சூடுபிடித்துக் காணப்படுகின்ற இந்த சூழலில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆற்காடு பஜார் பகுதியைச் சேர்ந்த கியான்சந்த் என்பவருக்கு சொந்தமான நகைக் கடையில் வருமான வரித்துறை திடீர் சோதனை நடத்தியது. வருமான வரி கணக்கில் முறைகேடுகள் நடந்து இருப்பதாகவும், அரசியல் கட்சியினருக்கு பணம் வழங்கி இருப்பதாகவும் எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இந்த சோதனையை வருமான வரித்துறை மேற்கொண்டு இருப்பதாக தெரிய வந்து உள்ளது.
சென்னை வருமான வரித்துறை உதவி ஆணையர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் கண்காணிப்பு அலுவலர் தேவி தலைமையில் 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், ஐந்து வாகனங்களில் வந்து நகைக்கடை மற்றும் அதன் உரிமையாளரின் வீட்டில் ஒரே நேரத்தில் சோதனை மேற்கொண்டனர். பல மணி நேரங்களாக நடைபெற்ற இந்த சோதனையில், வருமான வரி முறைகேடு தொடர்பான முக்கிய ஆவணங்கள் பல கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், வருமான வரி கணக்குகள் தொடர்பான அனைத்து விவரங்களையும் சமர்ப்பித்து விளக்கம் அளிக்க உரிமையாளர்களுக்கு அழைப்பாணை வழங்கப்பட்டு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

0 கருத்துகள்: