அரசு ஊழியர்களை இடமாற்றம் செய்யும் விவகாரம் ; தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு !!!
தேர்தல் நேரங்களில் அரசு அதிகாரிகள் நடுநிலையோடு செயல்பட வேண்டும். ஆனால், தொடர்ச்சியாக ஒரே இடத்தில் அவர்களை பணியாற்ற அனுமதிப்பது தேர்தல் நடத்தை விதிகளுக்கு முரணானது என்று மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
அரசு ஊழியர்களை இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருவதால், 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்களை இடமாற்றம் செய்ய உத்தரவு பிறப்பிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.
அரசுத் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை இடமாற்றம் செய்யும் வகையில் கடந்த 1994-ஆம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
அந்த அரசாணையின் அடிப்படையில் ஒரே இடத்தில் தொடர்ந்து பணியாற்றும் அரசு ஊழியர்களை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி, ஒருங்கிணைந்த மணப்பாறை தாலுகா மானவாரி மற்றும் இறவை பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
அந்த மனுவில், "அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யவும், அதிகார துஷ்பிரயோகத்தை தவிர்க்கவும், அதிகாரிகளை இடமாற்றம் செய்வது தொடர்பாக 1994-ஆம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
வேளாண்மைத் துறை, வருவாய்த் துறை மற்றும் காவல் துறை ஆகிய துறைகளில் பணியாற்றும் அரசு அதிகாரிகள் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றி வருவதன் காரணமாக, அரசு நலத் திட்டங்களை தங்களுக்கு வேண்டியவர்களுக்கு வழங்கி வருகின்றனர்.
தேர்தல் நேரங்களில் அரசு அதிகாரிகள் நடுநிலையோடு செயல்பட வேண்டும். ஆனால், தொடர்ச்சியாக ஒரே இடத்தில் பணியாற்ற அனுமதிப்பது தேர்தல் நடத்தை விதிகளுக்கு முரணானது. அந்த அதிகாரிகள் ஆளும் கட்சிக்கு சாதகமாக செயல்படவும் வாய்ப்பு உள்ளது" என்று தெரிக்கப்பட்டு இருந்தது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் தலைமையிலான அமர்வு, இடமாற்றம் என்பது பணி சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால், இந்த வழக்கை பொதுநல வழக்காக கருத முடியாது என தெரிவித்தது.
மேலும், தற்சமயம் அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் விவகாரத்தை தேர்தல் ஆணையம் கவனித்து வருவதால், எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று தெரிவித்த நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கை மனுவை சட்டப்படி பரிசீலிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

0 கருத்துகள்: