முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுத்தது தான் துரோகமாகத் தெரிகிறதா ? - இ.பி.எஸ்-க்கு செங்கோட்டையன் கேள்வி...
என் மீது எடப்பாடி பழனிசாமி கொலைவெறியில் உள்ளதாக செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.
நான் முதலமைச்சர் பதவியையும், கட்சியின் பொதுச் செயலாளர் பதவியையும் விட்டுக்கொடுத்தது தான் அவருக்குத் துரோகமாகத் தெரிகிறதா ?" என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமிக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வரப்பாளையம், அஞ்சானூர், வேமாண்டம்பாளையம் உள்ளிட்டப் பகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், வேட்பாளருமான செங்கோட்டையன் இன்று பொதுமக்களைச் சந்தித்து தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியபோது,
"முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சிக்காலம் ஒரு பொற்காலமாக இருந்தது. அவரது மறைவிற்குப் பிறகு அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்வி எழுந்த போது தமிழ்நாட்டில் இரண்டு பெயர்கள் தான் முன் நின்றன. ஒன்று நான், மற்றொன்று எடப்பாடி பழனிசாமி. அப்போது நான் அவரிடம், எனக்கு முதலமைச்சர் பதவியை விடக் கட்சி உடைந்து விடக் கூடாது என்பதே முக்கியம் என்று கூறிவிட்டு, அனைவரும் இணைந்து பணியாற்ற வழிவகை செய்தேன். எடப்பாடி பழனிசாமி கட்சியின் பொதுச் செயலாளரான பிறகும், நாம் ஒற்றுமையாக இருந்து பணியாற்ற வேண்டும் என்று தான் நான் கூறினேன்," என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "1989-ல் அ.தி.மு.க விற்கு வந்து அனைத்துப் பதவிகளையும் அனுபவித்து விட்டு இன்று கட்சிக்காக உழைப்பவர்களையே நீக்குகிறார்கள் என்றால் அதன் போக்கை நீங்களே பாருங்கள். 10 முறை வேட்புமனுத் தாக்கல் செய்த அனுபவம் கொண்ட எனக்கு, அதில் ஒரு சிறு குறை இருக்குமா என்பது தெரியாதா ? வேண்டுமென்றே என் மீது புகார் அளிக்கின்றனர். ஆனால், மனு சரியாக இருப்பதாகத் தேர்தல் நடத்தும் அலுவலரே தெரிவித்துவிட்டார்.
எடப்பாடி பழனிசாமி, விஜய்யை ஆதரித்து அவர் மூலமாக முதலமைச்சராகலாம் என்று நினைத்தார். அதற்கு நான் விடவில்லை. அதனால் தான் என் மீது அவர் கொலைவெறியில் உள்ளார். 10 முறை தோல்வியைக் கண்டவர்கள் இன்று என்னைப் பற்றிப் பேசுகிறார்கள்.
கோபிசெட்டிபாளையத்திற்கு வந்த எடப்பாடி பழனிசாமி என்னை துரோகி என்கிறார்.
நான் முதலமைச்சர் பதவியையும், கட்சியின் பொதுச் செயலாளர் பதவியையும் விட்டுக்கொடுத்தது தான், அவருக்குத் துரோகமாகத் தெரிகிறதா ?," என்று கேள்வி எழுப்பினார்.
அத்துடன், "என்னை இந்தத் தொகுதியில் டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் என்று அவர் கூறுகிறார். ஆனால், மக்களின் மனநிலை என்னவென்று அவருக்குத் தெரியவில்லை. எடப்பாடி பழனிசாமிக்கு எடை போடத் தெரியவில்லை. மக்கள் சக்தி இன்று விசில் சின்னத்தில் எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யத் தயாராக உள்ளனர்" எனத் தெரிவித்து உள்ளார்.

0 கருத்துகள்: