தமிழக தலைமைச் செயலாளர் மாற்றம்; தேர்தல் ஆணையம் அதிரடி !!!
மாற்றப்பட்ட இரு அதிகாரிகளையும் சட்டமன்றத் தேர்தல் முடியும் வரை தேர்தல் தொடர்பான எந்த பணிகளிலும் நியமிக்கக் கூடாது என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
தமிழக தலைமைச் செயலாளர் முருகானந்தம், ஆயுதப் படை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஜி.பி டேவிட்சன் ஆசிர்வாதம் ஆகிய இருவரையும் இடமாற்றம் செய்து, தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது. சட்டமன்றத் தேர்தலையொட்டி, அரசின் மூத்த அதிகாரிகள் இருவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், அரசின் முக்கிய பணிகளை தேர்தல் ஆணையம் நேரடியாக மேற்கொண்டு வருகிறது.
தேர்தல் சமயத்தில் தேர்தல் பாரபட்சமின்றி நடைபெற தொடர்ந்து ஒரே இடத்தில் பணியாற்றி வரும் அரசு அதிகாரிகளை மாற்றுவது நடைமுறையில் இருக்கிறது.
தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும் தேர்தல் ஆணையரை சந்தித்து ஆளும் அரசுக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகளையும், காவல் துறையினரை மாற்ற வேண்டும் என கோரிக்கைகள் விடுத்து வந்தனர்.
அதன்படி, தொடர்ந்து பல்வேறு நிலைகளில் பணியாற்றும் காவல் துறை அதிகாரிகள் தேர்தல் ஆணையத்தால் மாற்றப்பட்டு வந்த நிலையில், அண்மையில் தமிழ்நாடு பொறுப்பு டி.ஜி.பி வெங்கட்ராமனை இடமாற்றம் செய்த தேர்தல் ஆணையம், புதிய சட்டம், ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோரை நியமித்தது.
இந்நிலையில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்த தேர்தல் ஆணையம், முக்கிய அதிகாரிகளை மாற்றம் செய்து உத்தரவுகளை வெளியிட்டு உள்ளது.
அந்த உத்தரவின்படி, தமிழ்நாடு ஆயுதப்படை மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபி டேவிட்சன் ஆசிர்வாதம் மாற்றப்பட்டு உள்ளார். ஆயுதப்படை, லஞ்ச ஒழிப்புத் துறை புதிய டி.ஜி.பி யாக சந்தீப் மிட்டல் ஐ.பி.எஸ் நியமிக்கப்பட்டு உள்ளார்.
இதேபோல், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தத்தை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. புதிய தலைமைச் செயலாளராக சாய்குமார் நியமிக்கப்பட்டு உள்ளார்.
புதிய தலைமைச் செயலாளர் சாய்குமார், புதிய லஞ்ச ஒழிப்புத் துறை டி.ஜி.பி சந்தீப் மிட்டல் ஆகிய இருவரும் இன்று (ஏப்.8) மாலை 6.00 மணிக்குள் பதவியேற்க வேண்டும் என்றும், மாற்றப்பட்ட அதிகாரிகளான முருகானந்தம், டேவிட்சன் தேவார்சீவாதம் ஆகிய இருவரையும் சட்டமன்றத் தேர்தல் முடியும் வரை தேர்தல் தொடர்பான எந்த பணியிலும் நியமிக்க கூடாது என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
இந்நிலையில் இன்றிரவு 8:30 மணி அளவில் தலைமைச் செயலகத்திற்க்கு வந்த புதிய தலைமைச் செயலாளர் சாய்குமார், தமது அளிக்கப்பட்டு உள்ள இப்பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

0 கருத்துகள்: