புதன், 8 ஏப்ரல், 2026

நாளை சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு ; பாதுகாப்பு வளையத்தில் புதுச்சேரி !!!

SHARE

 நாளை சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு ; பாதுகாப்பு வளையத்தில் புதுச்சேரி !!!

புதுச்சேரியில் நாளை வாக்குப் பதிவு நடைபெற உள்ள நிலையில், அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, புதுச்சேரியில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால், அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி உள்ளது.

மொத்தம் 30 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரி சட்டமன்றத்திற்கு நாளை (ஏப்ரல் 09) ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது. புதுச்சேரியில் 5.03 லட்சம் பெண் வாக்காளர்களும், 4.4 லட்சம் ஆண் வாக்காளர்களும் என மொத்தம் 9.5 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். அதேபோல், முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் உள்பட மொத்தம் 294 பேர் களத்தில் உள்ளனர்.

மாநிலம் முழுவதும் 1,099 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. தேர்தல் பணிகளில் சுமார் 5,000 அரசு அதிகாரிகள் ஈடுபட உள்ளனர். முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் எளிதில் வாக்களிக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அத்துடன், வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

கல்வி நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்டவற்றுக்கு நாளை (ஏப்ரல் 9) அரசு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என்றும் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. நாளை காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப் பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

இதன் இடையே, தோ்தலையொட்டி புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறக்கப்பிட்டு உள்ளது. அந்த உத்தரவில், "5 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் ஒன்றாக கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. தேர்தல் தொடர்பான ஊர்வலங்கள், பொதுக் கூட்டங்கள் நடத்துவதற்கும், ஆயுதங்களை எடுத்துச் செல்லவும் அனுமதி கிடையாது" எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தேர்தல் பணிகளுக்காக புதுச்சேரி வந்திருந்த அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் புதுச்சேரிக்கு சம்மந்தம் இல்லாத நபர்கள் ஆகியோர், புதுச்சேரியை விட்டு இன்று மாலைக்குள் வெளியேற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. அதேபோல், தங்கும் விடுதிகளில் காவல் துறையினர் மற்றும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி எல்லையில் உள்ள தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டு உள்ளது. எல்லையில் தேர்தல் பறக்கும் படையினர், காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். அதேபோல், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பலத்த பாதுகாப்புப் போடப்பட்டு உள்ளது. முக்கிய பகுதிகளில் துணை ராணுவப் படை வீரர்கள் அணிவகுப்பு நடத்தி வருகின்றன.

புதுச்சேரியில் பதிவாகும் வாக்குகள் வரும் மே 04- ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளது.

மாநிலம் முழுவதும் வாக்குப் பதிவுக்கான மின்னணு இயந்திரங்கள் தாகூர் கலைக் கல்லுாரி, மோதி லால் நேரு பாலிடெக்னிக் கல்லூரி, மகளிர் பொறியியல் கல்லூரி வளாகங்களில் உள்ள பாதுகாக்கப்பட்ட அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தன. அவை அனைத்தும் இன்று காலை வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டு தொகுதி வாரியாக வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

மின்னணு இயந்திரங்களோடு கட்டுப்பாட்டு கருவிகள், விவிபாட் இயந்திரங்களும் அனுப்பப்படுகின்றன. இயந்திரங்களை கொண்டு செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் ஜி.பி.எஸ் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மாநிலம் முழுவதும் தேர்தல் பாதுகாப்பில் 45 கம்பெனி துணை துணை ராணுவத்தினர் ஈடுபட உள்ளனர்.

மேலும், அனைத்து வாக்குச்சாவடிகளும் வெப் கேமரா மூலம் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது. நாளை காலை 7 மணிக்கு அனைத்து வாக்குச் சாவடியிலும் ஓட்டுப் பதிவு தொடங்கும் நிலையில், மாலை 6 மணிக்கு வாக்குப் பதிவு நிறைவடைகிறது. இதன்பின் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு வரப்படுகிறது.

அங்கு தொகுதி வாரியாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் பிரிக்கப்பட்டு வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்படுகிறது. மேலும், 24 மணி நேரமும் பாதுகாப்பு அறை கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்படும். துணை ராணுவத்தினர், புதுச்சேரி போலீசார் என மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்படும். அடுத்த மாதம் 4-ஆம் தேதி புதுவை சட்டசபை தேர்தல் ஓட்டுப் பதிவு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

வழக்கமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் நாளன்று புதுச்சேரியிலும் தேர்தல் நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது முன்கூட்டியே தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் வரும் 23 ஆம் தேதி சட்டமன்ற வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: