தேர்தல் அவசரத்தில் ஆரம்ப பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம் : பிஞ்சு குழந்தைகள்வகுப்புகள் நடக்கும் போதே கனரக கட்டுமான பணிகள் - புகார்களைத் தட்டிக்கழிக்கும் பள்ளி நிர்வாகத்தால், பெற்றோர் கடும் கொந்தளிப்பு !!!
கோவை பூ மார்க்கெட் பகுதியில் இயங்கி வரும் தேவாங்க ஆரம்ப நிலைப் பள்ளியில், மாணவர்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் வகையில் வகுப்புகள் நடைபெறும் நேரத்திலேயே கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் மற்றும் நிர்வாகக் காரணங்களுக்காகப் பணிகளை அவசர கதியில் முடிக்கத் திட்டமிட்டு உள்ள ஒப்பந்ததாரர்கள், பிஞ்சுக் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் கட்டுமான பணிகள் மேற்கொண்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தேர்வுகள் தற்போது நடந்து வரும் நிலையில் சில நாட்களில் விடுமுறை வர உள்ளதால், விடுமுறை நாட்களில் செய்ய வேண்டிய பணிகளை, பள்ளி வேலை நாட்களில் மேற்கொள்வது குறித்து நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும், அவர்கள் செவிசாய்க்காத மனநிலையிலேயே இருப்பதாகப் பெற்றோர் தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.
கட்டுமானப் பொருட்கள் சிதறிக் கிடப்பதும், தூசு மண்டலத்திற்கு இடையே மாணவர்கள் பாடம் கவனிப்பதும் அவர்களின் ஆரோக்கியத்தைப் பாதிப்பதோடு மட்டுமல்லாமல், எந்த நேரத்திலும் ஒரு அசம்பாவிதம் நிகழலாம் என்கிற அச்சத்தை உருவாக்கி உள்ளது.
"தேர்தல் கமிஷன் கெடுபிடிகளுக்கு முன் பில் செட்டில் செய்ய வேண்டும் என்பதற்காகக் குழந்தைகளின் உயிரோடு விளையாடுகிறார்களா ?" என ஆவேசமாகக் கேள்வி எழுப்பும் பெற்றோர், மாவட்ட கல்வி அலுவலர் உடனடியாக இந்த இடத்திற்கு வந்து ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
கல்வி நிறுவனங்களில் பாதுகாப்பு நெறிமுறைகள் காற்றில் பறக்கவிடப்பட்டு உள்ள இந்த விவகாரம், தற்போது சமூக வலைதளங்களிலும் பேசுபொருளாக மாறி உள்ளது.
மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இந்த அபாயகரமான கட்டுமானப் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

0 கருத்துகள்: