ஞாயிறு, 12 ஏப்ரல், 2026

த.வெ.க-விற்கு ஆதரவு கிடையாது; பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் !!!

SHARE

 த.வெ.க-விற்கு ஆதரவு கிடையாது; பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் !!!

தமிழக வெற்றி கழகத்திற்கு அளித்த ஆதரவை திரும்ப பெறுவதாக முஸ்லிம் மக்கள் கழகத்தின் நிறுவன தலைவர் ஜைனுதீன் அறிவித்து உள்ளார்.

விஜய்-யின் கடைசி படம் என கூறப்படும் 'ஜனநாயகன்' இன்னும் திரையரங்குகளில் காட்சிப்படுத்தப்படவில்லை. குறிப்பிட்ட சில காரணங்களால் அந்த படம் திரையிடப்படுவதில் தாமதம் நீடித்து வருகின்றது. இந்த மாதிரியான சூழலில் நேற்று முன்தினம் (ஏப்ரல் 9) அந்த படத்தின் குறிப்பிட்ட சில நிமிட காட்சிகள் இணையத்தில் கசிந்து, ஒட்டுமொத்த திரையுலகிற்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 அதைத்தொடர்ந்து நேற்று முழு படமும் இணையத்தில் வெளியானது.

ஏற்கனவே திரைப்படம் வெளியாகுவதில் சிக்கல் நீடித்து வந்த நிலையில், தற்போது அந்த படத்தின் காட்சிகள் வெளியாகி மேலும் சில சிக்கல்களை உருவாக்கி இருக்கின்றது. இதன் இடையே, ஜனநாயகன் படத்தில் முஸ்லிம் மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்தும் வகையில் காட்சிகள் இடம் பெற்று இருப்பதாக புதிய சர்ச்சை தற்போது எழுந்து உள்ளது.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்திற்கு அளித்த ஆதரவை திரும்பப் பெறுவதாக முஸ்லிம் மக்கள் கழகத்தின் நிறுவன தலைவர் ச.சு. ஜைனுதீன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதில், "ஜனநாயகன் திரைப்படத்தின் சில காட்சிகள் முஸ்லிம்களுக்கும், இந்து சகோதரர்களுக்கும் இடையே பிளவை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

இது இந்தியா மற்றும் உலக அளவில் வாழும் இஸ்லாமியர்களின் உணர்வுகளைக் கடுமையாக பாதிக்கும் வகையில் அமைந்து உள்ளது. விழுப்புரம் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த தமிழக வெற்றி கழக நிர்வாகி எஸ்.சக்திவேல், நேரடியாக சந்தித்து ஆதரவு கோரியதன் அடிப்படையில் முஸ்லிம் மக்கள் கழகம், த.வெ.க வுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தது.

தற்போதைய சூழலில் அந்த ஆதரவு திரும்ப பெறப்படுகிறது. முஸ்லிம் மக்கள் கழக நிர்வாகிகளும், இஸ்லாமியர்களும் விஜய் தலைமையிலான கட்சிக்கு வாக்களிக்க வேண்டாம். விஜய்க்கு ஆதரவாக செல்லும் வாக்குகள் தேர்தல் முடிவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது.

பா.ஜ.க, அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தால் சில முக்கிய மாற்றங்கள் ஏற்படலாம் என்ற அச்சமும் வெளிப்படுத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக, இஸ்லாமியர்களுக்கான 3.5 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும். பொதுச் சிவில் சட்டம் அமல்படுத்தப்படுதல், ஹிஜாப் அணிவதற்கு கல்வி நிறுவனங்களில் தடை, மத அடிப்படையிலான பதற்றங்கள் அதிகரிப்பு, சிறுபான்மையினரின் உரிமைகள் பாதிப்பு, வழிபாட்டு தலங்கள் குறி வைக்கப்படுதல், உணவு பழக்க வழக்கங்களில் கட்டுப்பாடுகள் என பல்வேறு கவலைகள் முன் வைக்கப்பட்டு உள்ளன" என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: