ஞாயிறு, 12 ஏப்ரல், 2026

முதலமைச்சர் பிரச்சாரத்தில் அரசு ஊழியர்களா ? தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் அ.தி.மு.க பரபரப்பு புகார் !!!

SHARE

 முதலமைச்சர் பிரச்சாரத்தில் அரசு ஊழியர்களா ? தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் அ.தி.மு.க பரபரப்பு புகார் !!!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்தின் போது அவருடன் செல்லும் அரசு ஊடக வாகனத்தில் அரசு அதிகாரிகள் செல்வதாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் அ.தி.மு.க சார்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை நேரில் சந்தித்து அ.தி.மு.க வின் மாநிலங்களவை உறுப்பினரும், வழக்கறிஞருமான இன்பதுரை புகார் அளித்து உள்ளார். அதில், "தேர்தல் நடத்தை விதிகளை மீறி அரசு ஊழியர்கள் முதலமைச்சரின் பிரச்சாரத்திற்கு பணி செய்கின்றனர். 

இதுகுறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அவர் தெரிவித்து உள்ளார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இன்பதுரை எம்.பி., "பெண்களின் மாண்புக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி பேசுவதாக தி.மு.க வினர் குற்றம்சாட்டுகின்றனர். கடந்த தேர்தலில் இதே தி.மு.க மேடையில் எடப்பாடி பழனிசாமியின் தாய் குறித்து ஆ.ராசா அவதூறாக பேசினார். அப்போது தி.மு.க வினர் எங்கு சென்றனர் ? விருகம்பாக்கம் தி.மு.க பொதுக் கூட்டத்தில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்களே, அதில் தி.மு.க வினரின் நிலைப்பாடு என்ன?

பெண்கள் குறித்து முன்னாள் அமைச்சர் பொன்முடி இழிவாக பேசினார். அப்போது கேட்காதவர்கள், இப்போது கேட்கிறார்கள்; பெண்களின் மாண்பு, கௌரவத்தைப் பற்றி பேசுவதற்கு திமுகவிற்கு எந்தவித தார்மீக உரிமையும் இல்லை.

கோடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமி உள்ளே போக வேண்டியதாக இருக்கும் என ஆர்.எஸ்.பாரதி கூறுகிறார். எத்தனை நாள் இந்த பூச்சாண்டி காண்பிப்பீர்கள்; உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டபோது தி.மு.க வழக்கறிஞர்கள் தான் அவர்களை ஜாமீனில் வெளியே எடுத்தனர். இந்த சம்பவத்திற்கு பின்னாள் தி.மு.க இருந்து இருக்கும் என்கிற சந்தேகம் வருகிறது.

தற்போது தேர்தல் ஆணையத்தில் புகார் ஒன்று அளித்து உள்ளோம். அதில் முதலமைச்சர் பிரச்சாரம் செய்யும் இடங்களில் எல்லாம் அவருக்கு பின்னால் அரசு ஊடக வாகனம் செல்கிறது. அரசு ஊடக வாகனத்தில் அரசு அதிகாரிகளும் செல்கின்றனர். முதலமைச்சரின் பிரச்சாரத்தை வீடியோவாக பதிவு செய்து பத்திரிகை, ஊடகங்களுக்கும், தி.மு.க ஐடி விங்குக்கும் கொடுக்கிறார்கள். இது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது.

அதற்கான ஆதரங்களை தேர்தல் ஆணையத்திடம் கொடுத்து உள்ளோம்; இவை நிரூபிக்கப்பட்டால் முதலமைச்சர் போட்டியிடுவது செல்லாது; இதனை தேர்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும் என புகார் மனு கொடுத்து உள்ளோம்; டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் புகார் அளித்து உள்ளோம்.

அரசு அதிகாரிகள், அரசு வேலையைதான் செய்ய வேண்டும்; அரசு அதிகாரிகள் முதலமைச்சருக்கு பணி செய்வதை ஏற்க முடியாது; இவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: