வெள்ளி, 24 ஏப்ரல், 2026

ஓமலூர் அருகே இரட்டைக் கொலை- கொலையாளியும் விபரீத முடிவு !!!

SHARE

ஓமலூர் அருகே இரட்டைக் கொலை- கொலையாளியும் விபரீத முடிவு !!!

ஓமலூர் அருகே தாய், மகனை கொலை செய்த சக்திவேல் என்பவர் தானும் உயிரை மாய்த்துக் கொண்டு உள்ளார்.

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே கருத்தானூரை சேர்ந்த சிவன் என்பவரின் மகள் சத்யா (வயது 32). இவருக்கும் பூமாரி கோயில் காட்டுவளவுப் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து உள்ளது. இவர்களுக்கு மகிதா (வயது 13) என்ற மகளும் கிஷாந்த் (வயது 10) என்ற மகனும் உள்ளனர் .

சத்யாவின் குழந்தைகள் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பயின்று வந்தனர். இந்த நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சத்யாவின் பெற்றோர் ஊரான கருத்தானூரில் கரும்பாலை அமைத்து ராஜ்குமார் மற்றும் சத்யா தம்பதி நடத்தி வந்து உள்ளனர். அப்போது கரும்பாலையில் வேலை பார்த்த பெண்ணுக்கும், ராஜ்குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாகவும், இதை அடுத்து அவர் அந்த பெண்ணுடன் ஊரை விட்டு வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு இடையே சத்யா தன்னுடைய குழந்தைகளை கவனித்துக் கொண்டு தனியார் நிறுவனம் ஒன்றில் பணி புரிந்து வந்தார். அந்த நிறுவனத்தின் மேலாளர் சக்திவேலும், சத்யாவும் நண்பர்களாக பழகியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதால் சத்யாவின் மகள் மகிதா உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார்.

இன்று அதிகாலை சுமார் 2 மணி அளவில் சத்யா வீட்டிற்கு சென்ற சக்திவேல் அவருக்கு பாலியல்ரீதியாக தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதை தடுக்க வந்த 10 வயது சிறுவனை சக்திவேல் அரிவாளால் வெட்டி உள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சிறுவன் உயிரிழந்தான். அப்போது அதை தடுக்க முயன்ற சத்யாவையையும் வெட்டி உள்ளார். இதை அடுத்து சக்திவேல் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டார். சத்யா அலறி அடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தார். சத்தத்தைக் கேட்ட அக்கம், பக்கத்தினர் ஓடி வந்தனர்.

கை துண்டிக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் மயங்கியவாறு கிடந்த சத்யாவை மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், அவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த ஓமலூர் துணை காவல் கண்காணிப்பாளர் சஞ்சீவிகுமார் தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதைத் தொடர்ந்து சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே சக்திவேல், கருப்பூர் கோரிமேடு பகுதியில் உள்ள மரத்தில் தூக்கிட்டு விபரீத முடிவு எடுத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சக்திவேலின் உடலை கைப்பற்றிய காவல் துறையினர், பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் ஓமலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: