புதன், 29 ஏப்ரல், 2026

டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ததில் ஊழல் புகார்: எஸ்ஐடி கோரிய வழக்கில் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு !!!

SHARE

 டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ததில் ஊழல் புகார்: எஸ்.ஐ.டி கோரிய வழக்கில் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு !!!

டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ததில் அரசுக்கு ரூ.397 கோடி இழப்பு ஏற்பட்டதாக கூறி சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு (SIT) உத்தரவிடக் கோரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 29) தீர்ப்பு அளிக்க உள்ளது.

கடந்த 2021 முதல் 2023-ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் 45 ஆயிரம் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ததில் 397 கோடி ரூபாய் முறைகேடு நடந்து உள்ளதாக கூறி சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி அறப்போர் இயக்கத்தின் சார்பிலும், சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி அ.தி.மு.க வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் சரவணன் மற்றும் ராஜ்குமார் தரப்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. இந்த வழக்குகளை தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தது.

அறப்போர் இயக்கத்தின் தரப்பில், டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதலில் பங்கேற்ற ஒப்பந்ததாரர்கள் அனைவரும் ஒரே விலையை குறிப்பிட்டதால் தான் அரசுக்கு இழப்பு ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது.

அ.தி.மு.க நிர்வாகி சரவணன் தரப்பில், ஆரம்ப கட்ட விசாரணையில் குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இல்லை என புகார்களை முடித்து வைத்து இருப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறை அறிக்கை அளித்து உள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவு வரும் வரை காத்து இருந்திருக்கலாம். அறப்போர் இயக்கம் அனைத்து ஆதாரங்களையும் வழங்கி இருக்கிறது. அமைச்சர், மின் வாரிய உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்டு உள்ளதால் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

டான்ஜெட்கோ தரப்பில், 2021-2023ம் ஆண்டுகளில் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதலில் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக கூறுவது தவறு. அ.தி.மு.க வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் இருவரும் அரசியல் உள்நோக்கத்தோடும், விளம்பர நோக்கத்தோடும் வழக்கை தாக்கல் செய்து உள்ளனர். டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் தொடர்பான ஒப்பந்தத்தில் அனைத்து விண்ணப்பதாரர்களும் ஒரே விலையை குறிப்பிடுவது என்பது 1987-ஆம் ஆண்டு முதல் பின்பற்றப்படும் நடைமுறை தான் என்று வாதிடப்பட்டது.

லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில், சட்டப்படி ஆரம்பகட்ட விசாரணை நடத்தப்பட்டதாகவும், விசாரணையில் குற்றச்சாட்டுக்களுக்கு முகாந்திரம் இல்லாததால், புகார்கள் முடித்து வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, இந்த வழக்குகளின் தீர்ப்பை நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து இருந்தனர். இந்நிலையில், இந்த வழக்குகளில் இன்று (ஏப்ரல் 29) காலை 10:30 மணிக்கு தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பளிக்க உள்ளது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: